இல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி?

விநாயகர் முழுமுதற் கடவுளாக பார்க்கப்படுகிறார். எந்த கோயிலாக இருப்பினும், அந்த கோயிலின் முன்புறத்தில் விநாயகர் சிலையோ, சந்நிதியோ கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக இந்து ஆன்மிகவாதிகளால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தியை வழக்கமாக 11 நாள்கள் கொண்டாடுவது வழக்கம். வீட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் 11-ஆவது நாளில் அருகில் உள்ள நீர், நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இன்றைக்கு இந்த விநாயகர் சதுர்த்தியை பலரும் 3 நாள்களாக சுருக்கிவிட்டனர்.

சதுர்த்திக்கு தேவையானவை

களிமண்ணால் ஆன விநாயகர் சிலை, மலர்கள், பால், தயிர், தேன், இளநீர், நீர், அரிசி மாவு, நல்லெண்ணை, மஞ்சள் தூள், சீகைக்காய் தூள், சூடம், சாம்பிராணி, மாவிலை, தோரணங்கள்.

வழிபடும் முறை

விநாயகர் சதுர்த்தி அன்று காலை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். நல்ல நேரம் பார்த்து களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வீட்டுக்கு கொண்டு வர வேண்டும். விநாயகருக்கு சதுர்த்தி அன்று பூஜை செய்வதற்கு உகந்த நேரம் காலை, மாலை நேரமே. சதுர்த்தி பிறையை தரிசித்து, விநாயகர் வழிபாட்டை தொடங்க வேண்டும்.

முன்னதாக வீட்டின் நிலைப்படியில் தோரணம், மாவிலைகளைத் தொங்க விட வேண்டும். வீட்டு வாசலில் அரிசி கோலம் போட வேண்டும். இது உங்கள் இல்லத்திற்குள் நேர்மறை சக்திகளை கொண்டுவர உதவியாக அமையும்.

காலை, மதியம் விரதம் இருந்து விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். விநாயகருக்கு அருகம்புல் மாலை, தும்பைப் பூ, எருக்கம்பூ சாற்றி வழிபடுவது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப பட்சணங்கள் செய்யலாம். பொதுவாக 16 வகையான உணவுகளை விநாயகருக்கு படைப்பதுண்டு.

குறிப்பாக, மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சம் பழம், தேங்காய்,விளாம்பழம், வாழைப் பழம், கொய்யாப் பழம், மாதுளை,லட்டு, சுண்டல் ஆகியவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்வர்.

தூப, தீப ஆராதனையின்போது கீழ்க்கண்ட பாடலை பாடலாம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
(நல்வழி : கடவுள் வணக்கம்)
இப்பாடலின் பொருள்:(கோலம் = அழகு, துங்க = பெருமை மிகுந்த, கரிமுகம் = யானை முகம், தூமணி = தூய மணி, தமிழ் மூன்று = இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்)
பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே! நான் உனக்கு இனிய பாலையும் தெளிந்த தேனையும் வெல்லப் பாகினையும் பருப்பு வகைகளையும் கலந்து படைக்கிறேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தருவாயாக! என்று ஒளவையார் வேண்டுகிறார்.

 விநாயகரை வழிபடுவதற்கான மந்திரங்கள்

விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே

விநாயகர் சுலோகம்:

கஜானநம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந் ப்ரசோதயாத்.

ஐந்து கரத்தானை யானை முகத்தானை

இந்தின் இலம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித் சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ

என நம்மால் இயன்ற மந்திரங்களால் விநாயகரை வழிபடலாம். எதுவும் இயலாவிட்டால் ஓம் கம் கணபதியே என்ற எளிய மந்திரமே விநாயகரை வழிபட போதுமானது.

மணியோசை எழுப்புங்கள்

விநாயகர் வழிபாட்டின்போது மணியோசை எழுப்புவது நல்லது. விநாயகருக்கு மணியோசை விருப்பமான ஒன்று. அதேபோது ஆராதனையை அடுத்து தோர்பி கர்ணம் போடுவது நல்லது. (தோர்பி கரணம் என்பதைத்தான் நாம் தோப்புக்கரணம் என சொல் வழக்கில் பயன்படுத்துகிறோம். தோர்பி என்றால் கைகளால், கர்ணம் என்றால் காது, தோர்பி கர்ணம் என்றால் கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்வது என பொருள்).

வீட்டில் வைத்து 3 நாள்கள் வழிபடும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உரிய பூஜைக்குப் பிறகு நீர், நிலைகளில் கரைக்க வேண்டும். அவற்றை நீர்நிலைகளில் தூக்கி வீசக் கூடாது. நீரில் அமிழ்த்தி மூழ்கச் செய்து கரைக்க வேண்டும். அப்படி நீர்நிலைகளில் கரைக்கும்போது அச்சிலையுடன் மலர்களையும், ஒருசில நாணயங்களையும் சேர்த்தணைத்து கரைக்க வேண்டும். இது நமது துன்பங்களை விநாயகரிடம் ஒப்படைப்பதாகவும், அந்த துயரங்களை அவர் நீரில் தன்னோடு இணைத்து கரைத்துக் கொள்வதாகவும் ஐதீகம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.