வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் போட உகந்த காலம் எது தெரியுமா?

வாஸ்து சாஸ்திரம் அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 4

நாம் வசிக்கும் ஒரு இருப்பிடம் – வீடு, இல்லம், கட்டடம் என எப்படி பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் அதில் மனிதன் ஆரோக்கியமாக வசிப்பதற்கான சக்திகளை ஈர்ப்பதற்கான வழிமுறைகள்தான் வாஸ்து சாஸ்திரம். பஞ்சபூத சக்திகளை சரியான அளவில் நாம் வசிக்கும் இடத்தில் நிலைப்பெற செய்வதன் மூலம் அந்த ஆரோக்கியத்தை மனிதன் பெற முடியும் என்பதையும் நாம் அறி்ந்துள்ளோம்.

வாஸ்து சாஸ்திரத்தில் ஈசானிய மூலையும், வடகிழக்கு பகுதியும் முக்கியத்துவம் பெறுகின்றன. அறிவியல் ரீதியாக வடக்கு, தெற்கு அச்சில் பூமி தன்னைத் தானே சுழன்று வருகிறது. அத்துடன் அது சற்று வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் அதன் சுற்று அமைந்துள்ளது என்பதையும் அறிவோம். அதன் காரணமாகவே ஈசானிய மூலையும், வடகிழக்குப் பகுதியும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

வாஸ்து புருஷனுக்கு ஒருசில தன்மைகள் உண்டு. அதன்படி வாஸ்து புருஷனின் பார்வை மாதத்துக்கு மாதம் மாறுபடும் (பருவநிலை மாற்றம்போல்). அதை சாஸ்திரங்களில் திருஷ்டி என்கின்றனர்.

பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாத காலங்களில் வாஸ்து புருஷனின் பார்வை வடக்கு திசை நோக்கி இருக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் அதன் பார்வை கிழக்கு திசை நோக்கி இருக்கும். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அதன் பார்வை தெற்கு திசை நோக்கி இருக்கும். மார்கழி, தை, மாசி மாதங்களில் மேற்கு திசை நோக்கி இருக்கும். இதை சரவாஸ்து என அழைப்பர்.

சரவாஸ்தை அடிப்படையாகக் கொண்டு வீடு கட்டுவதற்கு உகந்த மாதங்களை சாஸ்திர வல்லுநர்கள் வரையறுத்துள்ளனர்.

வாஸ்து புருஷன் குறிப்பிட்ட மாதங்களில் நோக்கும் திசைகள் கட்டுமானப் பணிகளில் அஸ்திவாரம், வீட்டின் பிரதான நுழைவாயில் நிலை வைத்தல் ஆகியவற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதன்படி வீடு கட்டுவதற்கு சாதகமான மாதங்களாக வைகாசி (ஏப்ரல், மே மாதங்கள்), ஆவணி (ஜூலை-ஆகஸ்ட்), கார்த்திகை (அக்டோபர்-நவம்பர்), மாசி (ஜனவரி-பிப்ரவரி) பங்குனி (பிப்ரவரி-மார்ச்) ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன.

வைகாசி, ஆவணி, மார்கழி, தை, பங்குனி மாதங்களில் வீட்டுக்கான அஸ்திவாரம், பிரதான நிலை வைக்க சிறந்த காலமாகும்.

சிறந்த மாதங்களை தேர்வு செய்யும் அதே நேரத்தில் சுக்லபட்சம், திதிகள் ஆகியவற்றையும் நாம் தேர்வு செய்வது நல்ல நேரத்துக்கு முக்கியமானது.

அதன்படி சுக்ல பட்சம் என்பது வளர்பிறை காலமாகும். அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பௌர்ணமி வரையிலான 15 நாள்களே சுக்ல பட்சம் ஆகும்.

அதேபோல் ஒரு மாதத்தில் 30 திதிகள் வருகின்றன. இதில் அமாவாசை தொடங்கி வரும் 15 திதிகள் வளர்பிறை திதிகள் ஆகும்.

பௌர்ணமி தொடங்கி வரும் 15 திதிகள் தேய்பிறை திதிகள் ஆகும்.

திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்பதே அர்த்தம். வானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே ஏற்படும் தூரத்தின் பெயர்களாக இவை அமைந்துள்ளன.

பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7 சப்தமி, 8 அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15 பௌர்ணமி அல்லது அமாவாசை என 30 தினங்களில் வருகின்றன.

அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரு திதிகள் தவிர பிற 14 திதிகளில் சில சுப திதிகளாகவும், சில அசுப திதிகளாகவும் கருதப்படுகின்றன.

அதன்படி உகந்த மாதங்களாக கருதப்படும் மாதங்கள் ஏதேனும் ஒன்றில், வளர்பிறை காலத்தில் (சுக்ல பட்சம்) துவிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் அஸ்திவாரம், நிலைவாசல் வைக்கலாம்.

உகந்த மாதங்களை அறிந்துள்ள நாம் வீடு கட்டுவதற்கு சாதகமற்ற மாதங்களையும் அறிவது அவசியம். சித்திரை (மார்ச்-ஏப்ரல்), ஆனி (மே-ஜூன்), ஆடி (ஜூன்-ஜூலை), புரட்டாசி (ஆகஸ்ட்-செப்டம்பர்), ஐப்பசி (செப்டம்பர்-அக்டோபர்), மார்கழி (நவம்பர்-டிசம்பர்), தை (டிசம்பர்-ஜனவரி) ஆகிய மாதங்கள் வீடு கட்டுமானம் தொடங்குவதற்கு உகந்த மாதங்கள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த மாதங்களில் காணப்படும் பருவநிலையை நாம் கருத்தில்கொண்டால் இவையும் இன்றைய அறிவியலுக்கு பொருத்தமானவை என்பதை அறிந்துகொள்ளலாம்.

(அடுத்து வருவது… ஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா?)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.