திக்குகளும் அவற்றின் குணங்களும்…

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 3

இந்த தொடரின் முந்தைய பகுதிகளையும் படித்தும், சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்றைக்கேனும் இதில் உள்ள தகவல்கள் உதவக் கூடும்.

வாஸ்து சாஸ்திரம் எந்த மதத்துக்கும் உரியது அல்ல. அது மனித சமூகத்தின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட விதிகளைக் கொண்டது. இதனால் எந்த தனி மனிதனுக்கும் இது தனக்கு தேவையில்லாத ஒன்று என்று ஒதுக்கி விட முடியாது என்கின்றனர் சாஸ்திர நிபுணர்கள்.

திக்குகள் (திசைகள்) வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவை என்பதையும், அவற்றுக்கு தனி குணாதியசங்களும் உண்டு என முந்தைய பகுதியில் கூறியிருந்தோம். அதை இப்போது பார்ப்போம்.

வாஸ்து என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு வீடு கட்டும் மனை என்று பொருள்படும். எட்டு திசைகளும் அஷ்ட திக்குகள் என அழைக்கப்படுகின்றன. வாஸ்து புருஷனை மனித சரீரமாக (உடலாக) பாவித்து இந்த அஷ்ட திக்குகள் நிலைகளை வர்ணித்துள்ளனர். வாஸ்து புருஷன் ஒரு மனையின் ஈசானிய மூலையில் (வடகிழக்கு மூலை) தலை வைத்து தென்மேற்கு திசையில் பாதங்கள் பதிந்தவாறு ஒரு மனையில் குப்புறப்படுத்தவாறு காட்சி தருவதாக சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன.

அதன்படி அவரது புஜங்கள் வடக்கு-தெற்கிலும், முழங்கால்கள் தென்கிழக்கு-தென்கிழக்கிலும், பாதங்கள் இரண்டும் தென்மேற்கு மூலையிலும் இருக்கின்றன.

அதன்படி கட்டமைப்பின் நாயகரான வாஸ்து புருஷன் ஈசானிய மூலையில் அமர்ந்திருப்பதாகவும், ஆக்கினேய மூலையில் அக்கினி தேவனும் (சூரியனும்), தெற்கு மூலையில் யமதர்மனும், நைருதி மூலையில் பூதநாயகனும், மேற்கு மூலையில் வருணதேவனும், வடக்கு மூலையில் குபேரனும், கிழக்கு மூலையில் அறிவுக்கு அதிபதியும் அமர்ந்திருப்பதாக ஐதீகம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆகாயத்துக்கும், பூமிக்கும் அதிபதியாக இறைவனே வாஸ்து புருஷ ரூபமாக ஒவ்வொரு மனைக்கும் விளங்குகிறார்.

ஒரு வீட்டைக் கட்டுவதற்கான இடத்தை வரையறை செய்து அதன் எல்லைகளை நிர்ணயித்ததுமே அங்கு வாஸ்து புருஷனின் வாசம் ஏற்பட்டு விடுவதாக அர்த்தம்.  ஒரு கட்டடம் கட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட வளாக எல்லைகள் கொண்ட பகுதி வட்ட வடிவிலோ, சதுர வடிவிலோ என எந்த ஒரு வடிவில் சுற்றுச் சுவர்கள் அமைந்துவிட்டாலும் அது வாஸ்து புருஷ மண்டலமாக மாறிவிடுகிறது. இந்த மண்டலத்தின் மத்தியப் பகுதி பிரம்ம தேவனுக்கு உரியதாகும். இதனால் அந்த வாஸ்து மண்டலத்தின் அதிபதியாக நம்மை சிருஷ்டித்த பிரம்மாவே அதிபதியாக விளங்குவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

ஆக பிரபஞ்ச சக்திகளின் மிகச் சிறந்த கட்டமைப்பைக் கொண்டதாக அந்த மனையில் கட்டப்படும் கட்டடம் அமைவதற்கு இந்த அதிபதிகளின் குணாதிசயங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.

நைருதி திக்கில் (தென்மேற்கு) அமர்ந்துள்ள பூதநாயகனின் குணங்களாக ஆயுள் விருத்தி, மரணம், செயல்கள், வாழ்க்கை மாற்றம் ஆகியவை அமைந்துள்ளன.

அக்னி மூலையான ஆக்கினேயம் சூரிய அம்சமாக அமைவதால் மனித ஜீவிதத்துக்கு ஆதாரமாக விளங்கும் உணவு சமைப்பதற்கான செயல்பாட்டுக்குரிய இடமாக அமைந்துள்ளது.

பிற திக்குகளின் அதிபதிகள் அமர்ந்துள்ள திசைகளுக்கு ஏற்ப அவற்றின் குணாதிசயங்கள் அமைந்துள்ளன. அதன்படி, தெற்கு – செல்வம் கொழிப்பது, மகிழ்ச்சி, குழந்தைச் செல்வங்கள், பயிர் விளைச்சல் ஆகியவற்றையும், மேற்கு திசை – புகழ், செல்வாக்கு, நல்ல பெயரெடுத்தல் ஆகியவற்றையும் குறிக்கின்றன.

வடமேற்கு திசை வியாபார மாற்றங்கள், நட்பு, விரோதம் போன்றவற்றை சார்ந்தது. வடகிழக்கு (ஈசானியம்) ஆயுள் விருத்தி, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை குறிப்பதாகும்.

அதேபோல் வடக்கு திசை பெண்களுக்கும், குபேரனுக்கும் உரியது. கிழக்கு திசை ஆண்களுக்கும் உரிய இடங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன.

ஒரு வீட்டில் குடியிருப்போருக்கு தேவையான ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் வழங்கக் கூடியவையாக அறிவியல் ரீதியாக பஞ்சபூத சக்திகள் விளங்குகின்றன. ஆரோக்கியம் இருக்கும் இடத்தில் ஆற்றல் இருக்கும், ஆற்றல் இருக்கும் இடத்தில் செயல்பாடு இருக்கும். செயல்பாடு இருக்கும் இடத்தில் செல்வம் சேரும். செல்வம் சேரும் இடத்தில் மகிழ்ச்சியும், குதூகூலமும் இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று.

அந்த ஆரோக்கியத்தை தர வல்லவையாக காற்று (காற்றோட்டம் மிக்க கட்டமைப்பு), நமக்கு தேவையான சுகாதாரமான தண்ணீர் (நீர்), உணவு தரும் நிலம், அந்த உணவுக்கு சுவையும், பக்குவமும் அளிக்கும் அக்னி (நெருப்பு) வாசம் செய்யும் சமையல் அறை, ஆரோக்கியமான உடல் இயக்கத்துக்கு தேவையான உறக்கத்துக்கு இருளையும், செயல்பாட்டுக்கு ஒளியையும் தரும் ஓய்வறை (ஆகாயம்) ஆகியவை விளங்குகின்றன. இந்த பஞ்சபூத சக்திகள் சரிவர கிடைக்க நிர்ணயிக்கப்பட்ட விதிகளே வாஸ்து சாஸ்திரம்.

வாஸ்துபடி ஒரு வீடு, ஒரு வணிக தளம் அமையாவிட்டால் அந்த வீட்டில் வசிப்பவர்களோ, வணிக வளாகத்தில் வணிகம் செய்பவரோ அடிக்கடி குழப்பங்களையும், இடர்பாடுகளையும் சமாளிக்க வேண்டி வரும் என்பது பொதுவான கருத்து. இது நம்பி்க்கையின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், வசிக்கும் இடமோ, வணிகம் செய்யும் இடமோ காற்றோட்டம், சூரிய ஒளி போன்றவை போதுமானவையாக அமையாவிட்டால், உடல்நலக் கேடு ஏற்படும் என்பது திண்ணம். உடல் நலக்கேடு காரணமாக சிந்திக்கும் ஆற்றல், சுறுசுறுப்பான செயல்பாடு, மனநலன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என்பதும் நாம் அறிந்த ஒன்றே.

(அடுத்து வருவது வாஸ்து புருஷ தன்மைகள்…)

Geekbuying WW
Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.