வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய அம்சம் எது தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.. பகுதி 2
வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய அம்சமாக விளங்குவது திக்குகள் (திசைகள்). சூரியன் தோன்றும் திசையான கிழக்கு, மறையும் திசையான மேற்கு, பூமியின் வடதுருவம் அமைந்த வடக்கு, தென்துருவம் அமைந்த தெற்கு ஆகிய 4 திக்குகளுடன், இந்த திக்குகள் இணையும் மூலைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதன்படி கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு ஆகிய திக்குகள் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவை. திக்குகளை இணைக்கும் மூலைகளான வடகிழக்கு மூலை ஈசானியம் எனவும், தென்கிழக்கு மூலை ஆக்கினேயம் எனவும், தென்மேற்கு மூலை நைருதி எனவும், வடமேற்கு மூலை வாயுவியம் (வாயு) எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்த மூலைகள் கூட வாஸ்து சாஸ்திரத்தில் இரண்டாக பிரிக்கப்படுகின்றன. அதன்படி வடகிழக்கு (ஈசானியம்) கிழக்கு வடகிழக்கு, வடக்கு வடகிழக்கு என இரண்டாவும், தென்கிழக்கு (ஆக்னேயம்) கிழக்கு தென்மேற்கு, தெற்கு தென்கிழக்கு எனவும், தென்மேற்கு (நைருதி) தென் தென்மேற்கு, மேற்கு தென்மேற்கு எனவும், வடமேற்கு மூலை (வாயு) மேற்கு வடமேற்கு, வடக்கு வடமேற்கு எனவும் பிரிக்கப்படுகின்றன. இந்த திக்குகள் அனைத்துக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.
மேற்குறிப்பிட்ட திக்குகளும், மூலைகளும், அவற்றின் குணாதிசயங்களும் மனதில் பதிந்துவிட்டால் நீங்களும் ஒரு வாஸ்து நிபுணர்தான்.
திக்குகளின் குணம் அறிந்துகொண்டால் ஒரு கட்டடத்தை நாம் ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ள முடியும். இந்த திக்குகளின் குணங்களுக்கு ஏற்ப நம் வீட்டின் சமையலறை, படுக்கை அறை, குளியலறை, வரவேற்பறை ஆகியவற்றை அமைப்பதுதான் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவம்.

வாஸ்து புருஷன் தொடர்பாக பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவை நம்முடைய அறிவியல் ரீதியான கண்ணோட்டத்துக்கு தேவையில்லை என்பதால் அந்த கதைகளை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை.
ஒரு பார்வையாளர் முதல் பகுதியைப் படித்துவிட்டு ஒரு கேள்வியை எழுப்பினார். வாஸ்துபடி வீடு அமையாவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் இன்னலுக்குள்ளாவார்களா? என்பதுதான் அக்கேள்வி.
வாஸ்துபடி அமையாத ஒரு வீட்டில் ஜாதகரீதியாக நல்ல பலன்களைத் தரும் தசாபுத்தி உடைய ஜாதகர் வசிப்பாரானால், அவர் எந்த கெடுதலுக்கும் உள்ளாக மாட்டார் என்பதுதான் ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. ஜாதக ரீதியாக கெடுதல் செய்யும் கிரகங்களால் பாதிப்பு ஏற்படும் சூழல் இருக்கும் ஜாதகர், வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட வீட்டில் வசித்தால் அவருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் தடுக்கப்படும். கடவுள் ஆசிர்வாதம் அந்த வீடுகளில் அமைவதால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போகும் என்பார்களே அத்தகைய பலன்களை வாஸ்து கட்டமைப்பு இல்லங்கள் தரும் என்கிறார்கள் கணித சாஸ்திர நிபுணர்கள்.
ஜன்னல் எதுவும் இல்லாத ஒரு சிறிய அறையில் ஒருவரை அடைத்து வைத்தால் அவர் அதிகபட்சம் ஒரு நாள் ஆரோக்கியமாக இருப்பார். அதே அறையில் 4 பேரை அடைத்து வைத்தால் அந்த அறையில் உள்ள காற்றில் உள்ள ஆக்சிஜன் போதாமையால் சில மணி நேரங்களில் மயக்கம் அடைவர் என்பதையும், ஒருவர் வீட்டுக்குள்ளேயே போதுமான வெளிச்சம் இன்றி இருந்து வந்தால் நாளடைவில் அவருக்கு டி வைட்டமின் குறைபாடு காரணமாக எலும்புகள் உறுதித்தன்மையை இழக்கும் என்பதையும், காலை நேர வெயில் சுளீர் என உடலில் பாய்வதையும், மாலை நேர வெயில் உடலுக்கு இதமான சூழலை தருவதையும் நாம் அறிவோம்.
இந்த இயற்கை சக்திகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட வாஸ்து சாஸ்திர விதிகள் நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல, அறிவியல் சார்ந்ததும் கூட என்பதை இனி வரும் பகுதிகளை படிக்கும்போது உணரமுடியும்.
கட்டடக் கலையில் சிறந்த வல்லுநராக திகழ்வோரும் கூட நம்பிக்கையின் அடிப்படையில் வாஸ்து பூஜை செய்யாமல் பணிகளைத் தொடங்குவதில்லை. அத்துடன் அவர்கள் வாஸ்து விதிகளைத் தவிர்ப்பதுமில்லை என்பது கண்கூடு.
….அடுத்த வாரம்.. பகுதி 3…
You must log in to post a comment.