தெருகுத்து மனைகளை வாங்கலாமா?

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி  8


காலி மனைகளை வாங்க முற்படுவோர் முதலில் அணுகுச்சாலையின் அருகேயுள்ள மனைகளையே அதிகம் விரும்பி வாங்க முற்படுவர். அதேபோல் இரு தெருக்கள் சந்திப்பு, முச்சந்தி உள்ளிட்ட பகுதிகளை பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை.

மனை வாங்கும் அனைவரும் தங்களின் வீடு ஒரு மனைப் பிரிவில் கடைசியாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். இதனால் எதிர்புறமும், பக்கவாட்டிலும் மனைகள் சூழ இருக்கும் மனைகளையே தேர்வு செய்வர்.

இரண்டு வீதிகள் சேருமிடத்தில் இருப்பது மூலை மனைகள் – அதாவது கார்னர் பிளாட்டுகள் எனப்படுகின்றன. இத்தகைய மனைகள் 4 வகையாக உள்ளன.

வடமேற்கு மூலை மனை வடக்கு-மேற்கு சாலை அல்லது தெருவின் மூலைப் பகுதியில் அமைந்திருக்கும்.

தென்கிழக்கு மூலை மனை தெற்கு-கிழக்கு திசையில் தெருவோ, சாலையில் அமைந்திருக்கும்.

வடகிழக்கு மூலை மனை வடக்கு-கிழக்கில் சாலையோ, தெருவோ அமைந்திருக்கும்.

தென்மேற்கு மூலை மனை தெற்கு-மேற்கு நோக்கி அமைந்த தெருமுனையில் அமைந்திருக்கும்.

வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள மனைகள் ஈசானிய திக்கு மனையாக அமைகின்றன. இந்த மனைகள் வடக்கு-கிழக்கு பக்க சாலையில் அமைந்திருப்பதால் சுற்றுச்சுவர் அமைக்கும்போது வடகிழக்கு பகுதியில் கிரில் போன்ற தடுப்புவேலிகள் அமைக்க வேண்டும். வடக்கு-கிழக்கில் சுவர்களை எழுப்புவது நல்ல சக்திகளை தடுத்துவிடும் என்பதால் இந்த அமைப்பை செய்ய வேண்டும். இதனால் வடக்கு-கிழக்கு பகுதியில் கிரில் போன்ற அமைப்புகளைக் கொண்ட தடுப்புச் சுவர்களே சிறந்தது.

வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்துள்ள மனைகளை வாங்குவோர், தரைமட்ட அளவில் சரிசம மனையாக அமைந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிடில் வடக்கு-வடகிழக்கு பகுதி தாழ்ந்தும், தெற்கு-மேற்கு பகுதிகள் உயர்ந்திருக்க வேண்டும். அத்துடன் மனை நீண்ட சதுரமாக அமைந்திருப்பது சிறந்தது.

மனைகளை வாங்குவோர் தெருகுத்து எனப்படும் வீதி சூலம் அமைந்த மனைகளை தவிர்க்க முடியாத சூழலில்தான் வாங்குவர். அப்படி வாங்கி கட்டப்படும் வீடுகளில் வீதி சூலம் எதிரே தடுப்புச் சுவரில் ஒரு பிள்ளையார் சிலையை பதித்திருப்பதை நாம் சாதாரணமாக காணலாம்.

ஒரு மனை தெருகுத்தில் அமைந்திருப்பதை எப்படி நாம் அறிவது எனில் தெருப் பகுதி நீங்கள் வாங்க விரும்பும் மனை வரை வந்து முடிவடைவதுதான். இந்த தெருகுத்துகள் தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு திக்குகளில் அமைந்திருக்குமானால் நம் மனையின் சுற்றுச்சுவரில் பிள்ளையார் சிலை பதிக்கலாம். இது வாஸ்து புருஷ நம்பிக்கைகளில் ஒன்று.

இந்த தெருகுத்து வடக்கு, வடமேற்கு திசையில் இருந்தோ, கிழக்கு, தென்கிழக்கிலிருந்தோ, தெற்கு, தென்மேற்கு திசையில் இருந்து வந்தால் உயரமான தடுப்புச் சுவர் அமைத்து நீச்ச சக்திகளை தடுக்க முடியும். மனையில் இருந்து தெருப்பகுதி சாரம்போல் தாழ்வாக அமைந்திருந்தால், ஒரு இரும்பு கேட் அமைத்துக்கொள்ளலாம்.

(அடுத்து வருவது… பாதகமான தெருகுத்து மனைகள் எவை?)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.