புதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 6

புதிதாக மனை வாங்க முற்படுவோர் வாஸ்து சாஸ்திர அம்சங்களை பின்பற்றி வாங்குவதால் மிக எளிதில் அந்த மனையில் வீடு கட்டி முடிக்க முடியும். பொதுவாக காலி மனைகளாக இருப்பவற்றில் வடக்கு-கிழக்கு, வடகிழக்குப் பக்கம் தாழ்வாக அமைந்திருக்கும் மனைகளை வாங்குவது மிகவும் நல்லது.

இத்தகைய மனைகள் கிடைப்பது மிகக் கடினம். அவற்றை நாம் பார்த்து வாங்க பல மனைகளை பார்த்து வேண்டியிருக்கும். அதிர்ஷ்டவசமாக நம் கண்ணுக்கு இத்தகைய மனைகள் படுவதும் உண்டு. இன்றைக்கு அத்தகைய மனைகளை தேடி பிடித்து வாங்குவதற்கு போதிய நேரமும், நாம் வசிப்பதற்கு ஏற்ற இடமும, நம் கையிருப்புக்கு ஏற்ற விலையிலும் கிடைப்பது மிக அரிது.

இந்நிலையில் ஒருசில சாதக அம்சங்களைப் பின்பற்றி மனைகளை வாங்குவதே சிறந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் புறநகர் பகுதிகளில் தனி இடம் வரையறை செய்யப்பட்டு அவற்றில் மனைகள் போட்டு விற்பனை செய்கிறார்கள். அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் போன்ற நகரங்களிலும் இத்தகைய மனைகள் கிடைக்கின்றன.

இவற்றை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டியவை:

1) மனைகள் சதுர வடிவிலோ, நீண்ட சதுர வடிவிலோ இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். 1-க்கு 2 என்ற அளவுக்கு மிகப்படாமல் நீண்டசதுர மனைகள் அமைய வேண்டும்.

நீண்ட சதுரம்

2) மனையின் முன்பக்க அகலத்தைக் காட்டிலும் பின்பக்கம் அகலமாக இருந்தாலும் நல்லது.

3) சதுர வடிவில் (நான்கு பக்கமும் சரிசமமான அளவில்) இருந்தால் நல்லது.

உகந்த மனை

4) வடமேற்கு மூலைப் பகுதி 90 டிகிரிக்கு அதிகமாக விரிந்திருக்கலாம். 90 டிகிரிக்கும் குறைவாக இருக்கக் கூடாது.

5) மனைக்கு கிழக்குப் பக்கத்தில் சாலை அல்லது தெரு அமைந்திருந்தால் அது கிழக்கு சார்ந்த மனையாக இருக்க வேண்டும்.

6) மனைக்கு கிழக்கிலும், தெற்கிலும் தெரு செல்வதாக இருந்தால் அது தென்கிழக்கு மனையாக அமையும்.

7) தெற்கு பக்கம் தெரு அமைந்த மனை, மனைக்கு வடக்கிலும், மேற்கிலும் தெரு அமைந்த வடமேற்கு மனை, மனைக்கு வடக்கிலும், கிழக்கிலும் தெரு அமைந்த வடகிழக்கு மனை ஆகியவற்றை வாங்கலாம்.

8) வடக்கு-கிழக்கு பக்கத்தில் தெருக்கள் அமைந்திருந்தால் அவை மனையை விட தாழ்வாக இருக்க வேண்டும்.

9) மனைக்கு வடக்கிலும், கிழக்கிலும் தெரு அமைநது, அந்த தெரு தென்மேற்கு மூலையை நோக்கி தாழ்வாக செல்லுமானால் அந்த மனையை வாங்குவது மிகவும் நல்லது.

10) மனையின் நான்கு பக்கமும் தெரு அல்லது சாலை அமைந்திருந்தால் அதை வாங்குவது மிகவும் விசேஷம்.

வாங்கக் கூடாத மனைகள்:

  1. முக்கோண வடிவிலும், வட்ட வடிவிலும், 4-க்கும் மேற்பட்ட மூலைகளையும் கொண்ட மனைகளை வாங்கக் கூடாது.
  2. மனையின் முன்பக்கத்தைக் காட்டிலும் பினபக்கம் அகலமாக இருந்தால் தெரு தெற்கு பக்கமோ, மேற்கு பக்கமோ இருக்க வேண்டும். அப்படியின்றி கிழக்கு, வடக்கு பக்கங்களில் தெரு அமைந்திருந்தால் அது நல்ல மனை அல்ல.
  3. மனை அமைந்த பகுதியில் வடகிழக்கு மூலையுடன் தெரு முடிவடைந்தால் அது நல்ல மனை அல்ல.
  4. வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மூலைகள் வளர்ந்திருந்தால் அதுவும் நல்ல மனை அல்ல.

மேற்சொன்ன சாதகமான மனைகள், பாதகமான மனைகள் தவிர இதர அமைப்புகளில் அமைந்தவை மத்தியமானவை. சிறந்த மனைகள் அமையாத பட்சத்தில் மத்தியமான மனைகளை வாங்கலாம். இவற்றை வாஸ்து முறைப்படி சீர்செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதையும் அப்போது மனதில் கொள்வது நல்லது. அது குறித்த அம்சங்கள் அடுத்து வரும் பகுதியில் இடம்பெறுகின்றன.

(இப்பகுதியில் மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய சாதக, பாதக அம்சங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. வாஸ்து நிபுணர்கள் மனைகள் வாங்குவது தொடர்பாக நீண்ட விளக்கங்களைத் தருவது உண்டு. அத்தகைய விளக்கங்களை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்வது இயலாது. அதனால் எளிய முறையில் புரிந்துகொள்ளும் வகையில் மேற்சொன்ன சாதக, பாதக அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன- கட்டுரையாளர்)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.