வாஸ்து சாஸ்திரம் அறிந்துகொள்ளுங்கள்!

நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினருக்கு, சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும். அந்த வகையில் வீடு கட்ட விரும்புவோரும், வீடு வாங்க விரும்புவோரும் வாஸ்து சாஸ்திரம் பற்றி ஓரளவு தெரிந்துகொள்வது ஆரோக்கியமான சூழலைக் கொண்ட இல்லம் அவர்களுக்கு அமைவதற்கு வழிவகுக்கும் என்பதால் இத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்த தொடர் வாரம் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகளைக் கொண்டதாக அமைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பகுதி 1

வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன?

மனித சமூகம் இந்த பூமியை அன்னையாக ஆராதிக்கிறது. பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை நம் உடல் இயக்கத்தில் மட்டுமல்ல, இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக உள்ளன.

இயற்கையில் கண்ணுக்குத் தெரியாத சக்திகளை யோகிகள் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தி இந்த பூமியில் மனிதன் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகளை வகுத்து ஆன்மிகமாக போதித்தனர். பலவித ஆராய்ச்சிகள் மூலம் இயற்கைக்குள் அடங்கிய சக்திகளை கண்டறிந்து வெளிக்கொணருவாராக விளங்கும் ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளை அறிவியல் கண்டுபிடிப்புகளாக அறிவிக்கின்றனர். பகுத்தறிவு கொள்கை கொண்டோர் ஆன்மிகத்தை மறுக்கின்றனர். ஆனால் அறிவியலை ஏற்கின்றனர்.

இந்த அண்ட சராசரங்கள் எப்படி தோன்றின. ஒன்றுமில்லாத வெற்றிடமும், இருளும் எப்படி தோன்றின. எல்லாவற்றுக்குமான மூலாதாரம் என்ன போன்ற வினாக்களுக்கு ஆன்மிகத்திடம் பதில் உள்ளது. ஆனால் பகுத்தறிவு இன்னும் அவற்றுக்கான விடைகளைத் தேடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

என்றைக்கு பகுத்தறிவால் இவற்றுக்கு உறுதியான விடையைக் கண்டுபிடிக்க முடிகிறதோ அதுவரை இந்த பூமியில் ஆன்மிகத்தின் தாக்கத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

அந்த வகையில் இன்றைய அறிவியல் உலகில் அசைக்கமுடியாத மறைமுகமாக அறிவியல் காரணங்களை உள்ளடக்கிய வாஸ்து சாஸ்திரம் கட்டடக் கலையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஒரு சிறிய குடும்பம் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றின் நேரடி தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதோடு, அந்த சக்திகளை அளவுடன் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வதற்கான கட்டமைப்புதான் வீடு.

இத்தகைய வீடுகள் அமைவதற்கு சில விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்தனர். இயற்கையை நாம் எப்படி அளவோடு பயன்படுத்திக் கொள்வது என்ற ரீதியில் கட்டமைக்கப்பட்ட இந்த வழிமுறைகள்தான் வாஸ்து சாஸ்திரம்.

தாய், தந்தை, இரு குழந்தைகள் என்ற சிறிய குடும்பம் வசிப்பதற்கு குறைந்தபட்சம் இன்றைக்கு 400 சதுரடி தேவைப்படுகிறது. சராசரியாக ஆரோக்கியமான சூழலில் ஒரு மனிதன் வாழ்வதற்கு 100 சதுரடி இடம் தேவை என்பதுதான் அடிப்படை.

இயற்கை சக்திகளை நம் வசதிக்கு ஏற்ப, நாம் சுகாதாரமாக, ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கு உதவும் வகையில் பெறுவதுதான் வாஸ்து சாஸ்திரம்.

கட்டட பொறியாளர்கள் கட்டடங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை படித்துணர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு வீடோ, கட்டடமோ எப்படி அமைய வேண்டும் என்பதை அறிந்தவர்களாக உள்ளனர். ஆனால் அந்த அறிவை பெறாதவர்கள் ஒரு வீடோ, கட்டடமோ எப்படி அமைய வேண்டும் என்பதை எளிய முறையில் உணர்ந்து தெரிந்துகொள்வதற்கு அக்காலத்திலேயே வரையறுக்கப்பட்டதுதான் வாஸ்து சாஸ்திரம்.

வாஸ்து புருஷனின் கிரியைகள்:

பஞ்சபூத சக்திகளை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட சக்திகளே வாஸ்து புருஷன் என பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

ஒரு நாளில் ராகுகாலம், குளிகை, எமகண்டம், யோகம் போன்றவற்றுக்கு காலஅளவு இருப்பதுபோல், வாஸ்து புருஷனுக்கும் கால அளவுகள் உண்டு. வாஸ்து புருஷன் நித்திரை நீங்கி, தந்தாவதானம், ஸ்நானம், பூஜை, போஜனம், தாம்பூலம் ஆகிய 5 கிரியைகளை செய்வதாக ஐதீகம்.

இந்த கிரியைகளை அவர் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி ஆகிய 9 மாதங்களில் குறிப்பிட்ட நாழிகைக்கு மேல் மூன்றேமுக்கால் நாழிகையில் செய்கிறார். (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). இந்த 5 கிரியைகளில் கடைசி கிரியையான தாம்பூல தாரணம் செய்யும் நேரத்தில்தான் வாஸ்து சாஸ்திரத்தை நம்புவோர் பூமி பூஜை செய்து புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்குகின்றனர்.

வாஸ்து புருஷன் நித்திரை நீங்கி எழும் காலங்கள் பஞ்சாங்கங்களில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை பார்த்து வாஸ்து புருஷன் தாம்பூல தாரணம் செய்யும் நாழிகையை நாம் அறிந்துகொள்ள முடியும்.

(அடுத்து…வாஸ்துவில் முக்கியத்துவம் பெறும் திசைகள்…)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.