திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது

சென்னை: திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் மாலையில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். இவரின் தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர். திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்எல்ஏ இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்தாராம். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாகத் தெரிகிறது. இதற்கு எம்எல்ஏ தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நிலத்தை பார்வையிட இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவயில் அருகே சென்றாராம். அவருக்கும், அங்கு இருந்த எம்எல்ஏ.வின் தந்தை லட்சுமிபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது இமயம்குமாருடன் வந்த ரவுடி கும்பல் எம்எல்ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினராம்.

பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம்குமாரின் காரை நோக்கி சுட்டாராம். அதில் அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரிவாள் வெட்டால் காயமடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். சென்னை மேடவாக்கம் பகுதியில் தங்கியிருந்த இதயவர்மனை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.