திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குச் செல்ல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர், தூத்துக்குடி ரயில் நிலையங்களில் இறங்கி திருச்செந்தூர் செல்ல முடியும். மதுரை அல்லது தூத்துக்குடி விமான நிலையங்களை அடைந்து அங்கிருந்து இத்திருக்கோயிலுக்கு செல்ல முடியும்.
திருக்கோயிலின் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, உற்சவர் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள். அம்பாள்- வள்ளி தெய்வானை, தீர்த்தம் சரவண பொய்கை. திருமணத் தடை உள்ளவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து வேண்டிச் சென்றால் உடனடியாக வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்: ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நிகழ்வு இத்திருக்கோயிலில் விமர்சையாக நடைபெறுகிறது. அத்துடன் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் வழங்கப்படும் திருநீறு பன்னீர் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாகும். அத்துடன் திருத்தலத்தில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில்தான் திருநீறு வழங்குவதும் வழக்கத்தில் உள்ளது.
இத்திருக்கோயிலில் தினை மாவு நிவேதனம் நடைபெறுகிறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஒரு நாள் விரதம் இருந்து பாலும், பழமும் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த தினை மாவையும், தேனையும் அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
SUBSCRIBE
கோயில் தோன்றிய வரலாறு: தேவர்கள் தங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார்.
அவர் மூலம் அசுரர்களின் துன்புறுத்தலை முருகப்பெருமான் அறிந்தார். தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகப் பெருமான் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செந்தில்நாதர்” என மருவியது.
150 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகன் சந்நிதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சந்நிதி உள்ளது. முருகன் சந்நிதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்..
You must log in to post a comment.