திரையே நிஜம்!

வெ நாராயணமூர்த்தி

ஆன்மிக நெறியாளர்

சினிமா படக் காட்சியையே பார்த்திராத ஒரு சிறுவனுக்கு, அந்த அனுபவத்தைக் காட்ட விரும்பினார் அவனின் தாத்தா. அருகில் இருக்கும் திரை அரங்கத்துக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றார். சென்றபோது படக் காட்சி தொடங்கிவிட்டிருந்தது. மஹாபாரதக் கதை. ப்ரம்மாண்டமான திரையில் கிருஷ்ணனும், அர்ஜுனனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் பெரிய சேனைகள் போருக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. சிறுவன்  தன் வாழ்நாளில் முதல் முறையாக இதைக் காண்கிறான். அசந்து போகிறான்.

‘தாத்தா, கிருஷ்ணனும் அர்ஜுனனும் எங்கிருந்து வந்து பேசுகிறார்கள்? அவர்கள் இங்கேயே இருக்கிறார்களா?அவர்களை நேரடியாகப் பார்ப்பது போலவே தெரிகிறதே?’ என்று கேட்டான் சிறுவன். ‘இல்லையடா குழந்தை, இது படக்காட்சி. நீ பார்க்கும் மஹாபாரதக் கதை உனக்கு எதிரே தெரியும் இந்தப் பெரிய திரையில் ஒளிபரப்பப்படுகிறது.’ என்று ஒரு சிறிய விளக்கம் தந்தார் தாத்தா. சிறுவனுக்கு புரியவில்லை. ‘திரையா? எங்கே இருக்கிறது நீங்கள் சொல்லும் திரை? இங்கே நான் பார்ப்பது அனைத்தும் நிஜ மனிதர்களாக அல்லவா தெரிகிறது?’ என்றான் விடாமல்.

‘நீ பார்க்கும் மனித பிம்பங்களுக்கு பின்னால் தெரிவதுதான் திரை. இன்னும் சொல்லப்போனால் இந்த திரையில்தான் நீ பார்க்கும் படங்கள் பிம்பங்களாகப் பிரதிபலிக்கப் படுகின்றன’ என்றார் தாத்தா. ‘நீங்கள் சொல்லும் அந்தத் திரை எங்கே இருக்கிறது? என்னால் பார்க்க முடியவில்லையே? ஒரே வேளை அது கிருஷ்ணனுக்கு பின்னால் இருக்கிறதா? அங்கே அர்ஜுனன் அல்லவா நிற்கிறான்? அவனா திரை? என்றான் சிறுவன்.  ‘இல்லை இன்னும் பின்னால் பார்’ என்றார் தாத்தா. ‘அப்படியென்றால் அந்த குதிரை, யானை சேனைகளா?’. இல்லை இன்னும் பின்னால்’. நீலமாகத் தெரியும் வானமா?’ இல்லை இன்னும் பின்னால்’, என்று தாத்தா சொல்ல இந்த விளக்கம் தொடர்ந்தது. சிறுவனுக்கோ புரியவில்லை.  ‘எனக்கு நீங்கள் சொல்லும் திரை தெரியவில்லையே தாத்தா’ என்று சங்கடப் பட்டான் சிறுவன். ‘கொஞ்சம் பொறு’ என்று சமாதானப் படுத்தினார் தாத்தா.

சிறிது தேரத்தில் படக்காட்சி நின்றது. திடீரென்று அரங்கமே இருட்டானது. இடைவேளை நேரம். அரங்கத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அருகில் அமர்ந்திருந்தவர்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர். அப்போதுதான் முதல் முறையாக தன் முன்னே அந்த வெள்ளைத் திரையைக் கண்டான் சிறுவன். ‘அட, நான் இதுவரை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இவ்வளவு நேரம் புலப்படாத இந்தத் திரை இப்போது எங்கே இருந்து வந்தது?’ என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். யோசிக்கத் தொடங்கினான்.

மீண்டும் படக்காட்சி தொடங்கியது. கதை தொடர்ந்தது. மனிதர்கள் வந்தார்கள், கடவுளர்கள் வந்தார்கள், பேசினார்கள், பாடினார்கள், அழுதார்கள், சிரித்தார்கள், மாபெரும் போர் நடந்தது. ஆனால் சிறுவனுக்கோ கதை மேல், உருவங்கள் மேல் முன்பிருந்த நாட்டம், ஸ்வாரஸ்யம் இப்போது இல்லை.  வேறுபாடு தெரிந்தது. சிறுவன் புத்திசாலி.  தன் கேள்விகளை நிறுத்திவிட்டான். கதையையும் மறந்தான். தெரியும் உருவங்களை மறந்தான். அவைகளை விலக்கி,  இந்த பிம்பங்களுக்கு பின்னே, காட்சிகளுக்கு பின்னே  மறைந்திருக்கும் திரையை ஆராயத் துவங்கினான். காட்சி தெரியும்போது திரை மறைந்து விடுகிறது. தெரிவதில்லை, ஆனால் காட்சிகள் மறையும்போது மட்டுமே தெரிகிறது.  திரை இல்லாவிட்டால் இந்தக் காட்சிகளே இல்லை, தத்ரூபமாகத் தெரியும் இந்த மனிதர்களும், கடவுளர்களும் இல்லை. ‘ஆக, நான் காண்பது திரையின் மேல் பிரதிபலிக்கப்படும் பிம்பம்பங்களின் மாயாஜாலம். இல்லாத ரூபங்களை இருப்பதைப் போலவே தத்ரூபமாகக் காட்டுகிறது இந்தத் திரை. ரூபங்கள் வெறும் தோற்றங்கள், மாறி மாறி தோன்றி மறைகிறது. காட்சி முடிந்தவுடன் அனைத்தும் மறைகின்றன. திரை ஒன்றே நிஜம், நிரந்தரம்’ என்று உணர்ந்தான். தெளிவு பிறந்தது. இந்த உண்மையை உணரவைத்த தன் தாத்தாவுக்கு நன்றி சொன்னான்.

ரொம்ப அழகான கதை. எதற்கு என்னிடம் சொன்னீர்? என்று அப்பாவியாகக் கேட்டார் இந்தக் கதையை கேட்டுக்கொண்டிருந்த நண்பர். ஐயா, அந்தச் சிறுவனும், திரை அரங்கமும், திரையும் நம்மோடு சம்பந்தப்பட்டவை,  என்றதும் நண்பர் ஆச்சர்யத்துடன் பார்த்தார். சினிமாவைத் திரையில் பார்ப்பதைப் போல நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகையும் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். தொடர்ந்து காட்சிகள் தோன்றி மறைகின்றன. பகல் காட்சி, இரவுக்காட்சி அவ்வப்போது இடைவேளை (காட்சிகளே இல்லை). அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் மூன்று விதமான அனுபவங்களான விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை இவை. இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரைதான் உண்மையான ‘நாம்’. ஆத்மன். திரைக்கும் அதில் ஒளிரும் பிம்பங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நம் உடல் புலன்கள் திரையில் தெரியும் உருவங்களையெல்லாம் பார்க்கின்றனவே தவிர திரையைப் பார்ப்பதில்லை. திரைக்கும் அதில் காணும் பிம்பங்களுக்கும் வேறுபாடு தெரியும்போது நிஜத்துக்கும் தோற்றங்களுக்கும் வித்தியாசம் புரிகிறது. நவீன விஞ்ஞானம், ஒளிரும் பிம்பங்களைத்தான் நம் புலன்கள் அடையாளம் கண்டுகொள்ளமுடியும்  என்று நம்மை மேலும் குழப்புகிறது.  ஆனால் இது அல்ல உண்மை என்கிறது வேதங்கள்.

என்ன சொல்கிறீர்? என்று அதிர்ச்சியுடன் கேட்டார் நண்பர். ஆம். யோசித்துப்பாருங்கள். வெளிச்சமே இல்லாத ஒரு இடத்தில், செயற்கையாக ஒளியோ அல்லது ஒலியோ புகாத இடத்திலும் நம்மால் நம்மை, நாம் இருப்பதை உணரமுடிகிறது. இது எப்படி சாத்தியம்? ஏனென்றால்,  நம் புலன்கள் வழியாக நாம் உணரும் அனைந்து உணர்வுகளுக்கு ஒளி தருவதுதான் ஆத்மன். இது தெய்வீக சக்தி. உண்மையான ‘நாம்’. ஆனால் இந்த உடல், உள்ளம், புத்தி, அஹம்காரம் கலந்த கலவைதாம் நாம் என்று தப்பாக கற்பனை செய்துகொண்டு அறியாமையில் வாழ்ந்து வருகிறோம். எப்போதும் ஸ்வயமாகப் பிரகாசித்துக்கொண்டிருக்கும் ஸூர்யன் எப்படி இருளைப் போக்கி பொருள்களை அடையாளம் காட்டுகிறானோ, அதுபோல சதா ஒளிர்ந்துகொண்டிருக்கும் நம் ஆத்மன் வெளியில் காணும் பொருள்களுக்கு ஒளி தரும் ஸூர்யனாக நம் மனத்திரையில் அனுபவ பிம்பங்களை ஒளிர்விக்கிறது என்கிறது வேதங்கள். வெளியில் இருந்து வரும் ஒளி நமக்கு பொருள்களைக் காட்டுவதில்லை.  நம் ஆத்ம ஜோதிதான் வெளிஉலகத்துக்கே ஒளி தந்து, இன்னும் சொல்லப்போனால் நமக்கு வெளியே தெரியும் சூரியனையே அடையாளம் காட்டுகிறது. ‘தாமேவ பாந்தம் அனுபாதி சர்வம், தஸ்ய பாஸா இதம் சர்வம் விபாதி’ என்று இந்த உண்மையை அழகாக எடுத்துச் சொல்கிறது கடோபநிஷத்து.

நம் திரையில் தோன்றும் தோற்றங்களே இந்த உலகம் (இந்த உடலையும் சேர்த்து). நம் ஆத்மஜோதி ஒளி தராவிட்டால் எந்தப் பொருள் உணர்வும் அனுபவமும் நமக்கு இருக்காது. உண்மையில் ‘நாமே’ நாம் காணும் இந்த உலகிற்கெல்லாம் ஒளிதரும் ஸூர்யன். இங்கே திரை அரங்கமும் நாமே, திரையும் நாமே. திரையில் ஒளிரும் பிம்பங்களைக் கண்டு, அவையே நிஜம் என்று தவறாக ஏற்றுக்கொண்டு அசந்து போவது அறியாமை. பிம்பங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் நம்முடையது என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம். இந்த அறியாமையால் மறைந்திருக்கும் தவறை நம்மால் உணரமுடிவதில்லை. அந்தச் சிறுவன் தேடியது போல திரையைத் தேடுவதில்லை. திரையைக் காணமுடியாத நாம் வெளிஉலகம் காட்டும் திரைப்படம் ஒன்றே நிஜம் என்று எண்ணி, படக்காட்சியில் வரும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளோடு உறவாடி, உண்மையில்லாத பிம்பங்களோடு ஒன்றிப் போகிறோம். அவைகளே உண்மை, அவை நம்முடையவை என்று சந்தோஷப்படுகிறோம் அல்லது  வருத்தப்படுகிறோம்.

நம் முன் தெரியும் திரைக்காட்சிகளையும், கதாப்பாத்திரங்களையும் விட்டு விலகி, உண்மையான திரையே நாம்தான் என்ற தெளிவு வரும்போது பிம்பங்களுக்கு ஏற்படும் துக்கங்கள், சோகங்கள், சந்தோஷங்கள்  ஆகியவையெல்லாம் நம்மை விட்டு விலகுகின்றன. அவை வெறும் தோற்றங்களே, அவை நிரந்தரமற்றவை, நம்மோடு தொடர்பில்லாதவை என்று புரிகிறது. உடனே தோற்றங்களைச் சேர்ந்த அனைத்தும் (நல்லவை, கெட்டவை) மறைகின்றன. தோற்றங்களை விட்டு விலகி உடல்-மனம்-எண்ணங்களிலிருந்து பெரும் விடுதலையை உணர்வதுதான் வாழ்கையின் நோக்கம். இந்த விடுதலை ஒரு தெய்வீக நிலை. நம் இயல்பு நிலை. தெய்வீகத்தை உணர்தல் என்பது படைத்தவனோடு இரண்டறக் கலப்பது. படைத்தவன் அருளின்றி அவனை உணருவதுகூட சாத்தியம் இல்லை.  இந்த பாக்கியத்தை அடைந்தவர்களே   ‘வாழும்போதே மோக்க்ஷம்’ அடைகிறார்கள் என்று வருணிக்கின்றன வேதங்கள்.

நம் உண்மையான இயல்பைத் தெரிந்து கொண்டு, புரிந்துகொண்டு உணர்வதுதான் நம்மைப் பற்றிய அறியாமையைப் போக்கிக்கொள்ள சிறந்த வழி. இது சாதாரண காரியம் அல்ல. கடின உழைப்பு, முனைப்பு, பயிற்சி ஆகியவை தேவை. இந்த விளக்கம், தெளிவு அனைத்தும் சாதாரணமாக அனைவருக்கும் கிடைப்பதில்லை. எப்படி அந்த சிறுவனுக்கு அவனுடைய தாத்தா தெளிய வைத்தாரோ அதேபோல தாத்தா எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்த உண்மையை புரிந்துகொள்ள வேதங்கள் சொல்லும் தத்வ நிதர்சனங்களை விளக்கிச் சொல்லும் பிரம்மகுரு தேவை.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.