ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட கோரிக்கை
வேலூர்: தலைமையாசிரியர் சங்கம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கொடிய வைரஸ் தமிழகத்தில் ஆட்டிப்படைத்து பலியும், நோய்தொற்றும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்ந்த சங்க நிர்வாகிகளை பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிக்கும் வண்ணம் தாங்கள் சார்ந்துள்ள சங்கத்தின் சார்பாக கருத்தை தெரிவித்ததற்காக, சங்க நிர்வாகிகளுக்கு 17(பி) வழங்கிய பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் மிகவும் வருத்தமளிக்க கூடியதாக உள்ளது.
2019-20-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு (விடுபட்ட பாடங்கள்) பொதுத்தேர்வு ரத்து செய்தல் குறித்து வெளியிட்டுள்ள அரசாணை குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் கருத்து வெளியிட்டதாக இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்பு சங்கங்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும், தஞ்சாவூர் மாவட்ட மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமான பி.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்து கருத்துகளை, விமர்சனமாக எடுக்காமல் ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக எடுத்து, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பாகவும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாக அரசை கேட்டுக்கொள்கின்றோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.