ஜூலை 31 வரை தமிழகத்தில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எவை?

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25 முதல் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும் ஒருசில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது அறிவித்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமையுடன் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், அதை ஜூலை 31 வரை மாநில அரசு நீட்டித்துள்ளது.

கட்டுப்பாடுகள்:

அதன்படி, வரும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய (ஞாயிற்றுக்கிழமைகள்) தேதிகளில் எவ்வித தளர்வும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

மாநிலத்தில் தற்போது மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

அந்தந்த மாவட்டத்துக்குள் இ-பாஸ் இன்றி செல்ல அனுமதி உண்டு. வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.

நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

 மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களில் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள்,  ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. இருப்பினும்,  மருத்துவத் துறை, காவல்துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை, மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவைக்கு தடை நீடிக்கிறது.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை நீடிக்கும்.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளின்படி, திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

சென்னை தவிர…

சென்னை தவிர மற்ற இடங்களில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) ஜூலை 1 முதல் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் உள்ள முழு ஊரடங்குக்கு உட்பட்ட பகுதிகளில், 6-ஆம் தேதியில் இருந்து சில பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

 தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். இருப்பினும் 20 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.  இருபபினும் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்கலாம், அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது.

 தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6  முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.  டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10  முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படும்.  50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தலாம். உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை பயன்படுத்தப்படக் கூடாது.

தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீத அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
அத்தியாவசியமற்ற பொருள்கள் உட்பட அனைத்து பொருள்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. சைக்கிள் ரிக்ஷாவுக்கும் அனுமதி உண்டு. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தற்போதுள்ள நடைமுறை தொடரும்.

தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு பணிபுரிய அனுமதிக்கும் நடைமுறை தொடர்வதற்கும் மற்ற பகுதிகளில் தற்போதுள்ள இபாஸ் முறை தொடர்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள், அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திலிருந்து வந்து பணிபுரிவதற்கு, தொழிற்சாலை அல்லது நிறுவனம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அனுமதி பெற்று தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கலாம்.

இந்த அனுமதி அட்டை, தொழிற்சாலை அல்லது நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு இது பொருந்தாது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.