ஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முகவரியின் பெயரில் 30 கிலோ தங்கத்தைக் கடத்திய வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த ஸ்வப்னா கைதாகியுள்ளார். நாட்டையே பரபரக்க வைத்த இந்த சம்பவத்தில் சிக்கிய ஸ்வப்னாவின் கடந்த காலத்தை பற்றி பேசும்போது பலரையும் அவர் பாலியல் ரீதியான புகார்களில் சிக்க வைத்து அவர் தப்பி வந்துள்ளார் என்று கூறுகின்றனர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு தங்கம் கடத்தியதால் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கு சுவாரஸ்யமாக போகிறது. இந்த நேரத்தில் தங்கத்தைப் பற்றி அறிந்துகொள்வதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லோரும் தங்கத்தை கடத்திய ஸ்வப்னாவை பற்றி பேசும்போது, நாம் அவரை சிக்க வைத்த தங்கத்தைப் பற்றி பேசுவதில் தவறில்லை. அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதிலும் தவறில்லை.

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை தங்கம் முக்கியமான ஒன்று. தங்கத்தின் மீதான மோகம் இந்திய ஆண்களையும் விட்டுவைக்கவில்லை. அன்றாடம் கூலி வேலை செய்பவராக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு பவுன் அளவுக்காவது தங்க நகை இருந்தால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்திய பெண்களின் வாழ்க்கையில் அங்கமாக மாறிவிட்ட தங்க ஆபரணங்கள் கௌரவத்தின் அடையாளம், அந்தஸ்தின் அடையாளம். உலகின் பொருளாதாரத்திலும் அதன் பங்கு முக்கியமானதாக உள்ளது. அந்த அளவுக்கு தங்கத்துக்கு மதிப்பு உயர்ந்து வருவதற்குக் காரணம் அதை செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால்தான்.

தங்கம், பொன் என அழைக்கப்படும் இந்த உலோகம் Au என்ற குறியீடு மூலம் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண்.79 இதன் சாரடர்த்தி 19.3. நீரைப் போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுடையது. நாகரீகத்தை மனிதன் கற்றுக்கொண்டபோதே தங்கத்தின் மதிப்பையும் அவர் தெரிந்துகொண்டான். கிறிஸ்து பிறப்புக்கு முன்பு எகிப்திய பொற்கொல்லர்கள்தான் முதன்முதலில் தங்கத்தை ஆபரணங்களாக செய்யத் தொடங்கியுள்ளனர். அது காற்று, நிலம், நீர், வெப்பம் என எதிலும் நிறம் மாறாது, மங்காது என்ற ரகசியத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.

கிரேக்கம் லிடியாவின் அரசராக இருந்த க்ரோசிஸ் தங்கத்தை உருக்கி சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளார். அதைத் தொடர்ந்து உலக அளவில் நிலத்தடியில் இருந்தும் பாறைகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை மெல்ல மனிதன் கற்றுக் கொண்டான். மென்மையான அதே நேரத்தில் உறுதியான உலோகமான தங்கத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள், ஆடைகள் அரசன் முதல் ஆண்டி வரை அதன் மீது மோகம் கொள்ள வைத்துவிட்டது. ஒருசில அரசர்கள் காலத்தில் தங்கத்தில் நாணயங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் நாணயத்துக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. அன்றைக்கு பொருளாதார அந்தஸ்தின் அடையாளமாக கண்டறியப்பட்ட தங்கம் இன்று வரை அதன் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

தங்கத்தில் வேலைப்பாடு மிக்க ஆபரணங்களை செய்ய முடிவதற்குக் காரணம் அதன் கடினத்தன்மையும், நீட்சித்தன்மையும் ஒருங்கே பெற்ற உலோகத்தன்மைதான். தங்கத்தை மிக மெல்லிய தகடாக, கம்பியாக, எவ்வளவு மெலிதாவும் நீட்ட முடியும். வெப்பத்தையும், மின்சாரத்தையும் முழுமையாகக் கடத்தும் தன்மையுடையது. பெரும்பாலான தனிமங்கள் காற்றில் உள் வாயுக்களால், குறிப்பாக ஆக்சிஜனை கிரகித்து தன்மையை இழக்கக் கூடியவையாக உள்ளன. ஆனால் தங்கத்தின் பளபளப்புத் தன்மையை எந்த வாயுவாலும் எதுவும் செய்ய முடியாது. எந்த தனிப்பட்ட இரசாயணத்தாலும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஒருபங்கு நைட்ரிக் அமிலமும், 3 பங்கு ஹட்ரோகுளோரிக் அமிலமும் கலந்த கலவையான ராஜ திரவத்தில் மட்டுமே தங்கம் கரையும்.

தங்கம் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. அத்துடன் செங்கீழ்க்கதிர்களை வெளியிடும் ஆற்றல்கொண்டதால்தான் அதன் பொன் நிறம் நம்மை மயக்குகிறது. தங்கம் இன்றைக்கு வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம் விலை உயர்ந்த கெடிகாரங்களின் முள்கள், பேனாக்களின் முள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. முன்னணு பொருள்களில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒரு ஆண்டுகளில் மட்டும் மின்னணு பொருள்களில் சுமார் 5 ஆயிரம் டன் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தங்கத்தை காரட் என்ற அலகால் மதிப்பிடுகின்றனர். 24 காரட் என்பது சுத்தத் தங்கம். இதில் ஆபரணங்களை செய்ய முடியாது. ஏனெனில் அதில் உறுதித்தன்மை இருக்காது. 22 காரட் முத் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் என்பது 91.6 சதவீதம் தங்கமும், 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களும் கலந்தது. 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கம் இருப்பதாகும். 14 காரட் 58.5 சதவீதம் தங்கமும், மீதி பிற உலோகங்களும் கலந்தது. 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கம் கலந்தது.

22 காரட் தங்க நகைகள் மிக எளிதில் சேதமடையக் கூடியவையாக இருக்கும். காரட் குறைய குறைய நகைகள் உறுதியானவையாக இருக்கும். இன்றைய  பொற்கொல்லர்கள் நகை செய்ய வசதியாக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு கலக்கிறார்கள். குறிப்பிட்ட காரட் அளவு வரை ஒருசில உலோகங்களை கலக்கும் வரை தங்கத்தின் பளபளப்பு மாறாது, உறுதித் தன்மை அதிகமாக இருக்கும். அதனால்தான் நகை விற்பனையாளர்களில் சிலர் நாம் கேட்காமலேயே, நமக்கு தெரியாமலேயே உறுதியான நகைகளை கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பது ஆபரணத் தொழிலின் தனிச் சிறப்பு. அத்தகைய நகைகளை அதே விற்பனையாளர்களிடம் கொடுத்தால்தான் விலை போகும். வேறு இடங்களில் கொடுத்தால் அதை உருக்கி தங்கத்தை மட்டுமே பிரித்து அதற்கு விலை கொடுக்கும்போது நாம் போட்ட முதலீட்டில் பாதி கூட தேறாது.

தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றது. அதனால்தான் மிகப் பெரிய பணக்காரர்கள் வீட்டில் தங்க இலையிலும், தங்கத் தட்டில் சாப்பிடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. கோல்டு சிலாஜர், கோல்டு ஸ்ரைக், கோல்டு வாஜர் போன்ற மதுபானங்களிலும் சுத்தமான உலோகநிலை தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மனித உடலில் உள்ள இரத்தத்திலும் கூட இயற்கையாக தங்கம் கலந்திருக்கிறது என்பது அதை விட சுவாரஸ்யம். மனித உடலில் 0.2 மில்லி கிராம் தங்கம் உள்ளது. உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக இருந்தாலும் கூட, தங்க உப்புகள், தங்கக் குளோரைடு போன்றவை மனித ஈரல், சிறுநீரகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது எச்சரிக்கப்படுகிறது.

தங்க பஸ்பம் சாப்பிட்டால் மேனி பொலிவாக இருக்கும் என்ற நம்பிக்கை மனித சமுதாயத்தில் தொடக்க காலத்தில் இருந்தே விதைக்கப்பட்டதாகும். அதனால் அதை வைன், சாராயம் போன்றவற்றில் தங்கப் பொடியை கலந்து சிலர் பருவதும் உண்டு. ஆனால் இது உடலை பளபளக்க வைப்பதற்கு பதிலாக சிறுநீரகத்தையும், கல்லீரலையும் சிதைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சுத்தமான தங்க நகைகள் பெண்கள் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது. அத்தகையோருக்கு நிக்கல் போன்ற உலோகங்களுடன் தங்கத்தை கலந்து நகைகள் செய்துத் தரப்படுகின்றன.

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையில் ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கிறது. இத்தகைய பாறைகள்தான் சுரங்கங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. பாறைகளில் வெடி வைத்து தகர்த்து இரசாயண முறையில் இந்தத் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மின்பகுப்பு முறையில் தங்கம் சுத்தம் செய்யப்படுகிறது. பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி மணலாக மாறி ஆற்று பரப்பில் படர்ந்துள்ளதே அதில் கூட தங்கத் தூள்கள் கலந்துள்ளன. ஆனால் அவற்றை பிரித்தெடுப்பது அதன் மதிப்பை விட அதிக செலவாகும் என்பதால்தான் அதை பின்பற்றவில்லை.

ஒருசிலர் மணலில் இருந்தும் தங்கத் துகள்களை பிரித்து எடுக்கும் வித்தையை அறிந்தவர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள். அத்துடன் பொற்கொல்லர்கள் நடத்தும் பட்டறை பகுதிகளில் ஆபரணங்கள் செய்யும்போது காற்றில் கண்ணுக்குத் தெரியாத பொன் துகள்கள் பரப்பதுண்டு. அதனால் அப்பகுதிகளில் சேரும் மண், கசடுகள் மூட்டையாக சேர்க்கப்பட்டு அதை இத்தகையோருக்கு விலைக்கு விற்பனை செய்வதுண்டு. இந்த மண்ணை அவர்கள் எடுத்துச் சென்று இரவு பகலாக அந்த மண்ணை நீர் விட்டு சலித்து அதில் இருந்து பொன்னை பிரித்தெடுத்து அதே பொற்கொல்லர்களிடம் கொடுத்து பணம் ஈட்டுவது வாடிக்கை.

ரசவாதம் எனப்படும் கலையில் செம்பையும், இரும்பையும் பொன்னாக்க முடியும் என்று காலம்காலமாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த புரியாத கலை இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது..ஆன்மிகப் பெரியவர்கள், கடவுள் அருளாளர்கள் பலரும் இத்தகைய வித்தையை அறிந்திருந்ததாகவும் வழிவழியாக சொல்லப்பட்டு வந்தாலும், அறிவியல் ரீதியாக, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் வரை இதை  சாத்தியமற்றதாகவே கருத வேண்டியுள்ளது.

2014-ஆம் ஆண்டில் செய்த ஆய்வின்படி, பூமிக்கு கீழே மிக ஆழத்தில் தோராயமாக 1,83,600 டன் எடையுளள தங்கம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகில் மிக ஆழமான தங்கச் சுரங்கங்களில் 2 தென் ஆப்பிரிக்காவில் உள்ளன. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா, தென்அமெரிக்கா உள்ளிட்டவற்றில் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலம், கோலாரில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இலங்கையில் பூகொடை என்ற இடத்தில் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமணல் படிவுகளில் இருந்து அண்மைக் காலமாக தங்கம் எடுக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. ஆனால் உலக நாடுகளி்ல் அதிகம் தங்கத்தைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா விளங்குகிறது. இது இன்றைக்கல்ல. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக. இன்றைக்கு கோயில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளில் உள்ள தங்கத்தையும், காலம்காலமாக தங்க நகைகளை சேமிப்பில் ஆர்வம் காட்டும் நம் இந்திய பெண்கள் வைத்திருக்கும் நகைகளையும் கணக்கிட்டால் உலக நாடுகளில் தங்கம் அதிகம் இருப்பு வைத்துள்ள நாடுகள் பட்டியலில் நாம்தான் முதலிடத்தில் இருப்போம். அந்த அளவுக்கு தங்கம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் பொருளாதார ரீதியான கணக்கெடுப்புக்கெடுப்பில் கையிருப்பு வைத்திருக்கும் பட்டியலில் ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி நிறுவனம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

நம் வீடுகளில் தங்க ஆபரணங்களை சேர்ப்பதற்கு முன்னோர்கள் பல உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றில் ஒன்றுதான் அட்சய திருதியை நாளில் அதாவது சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் குவியும் என்ற நம்பிக்கை.  அது யாருக்கு பலன் அளிக்கிறதோ, இல்லையோ, தங்க ஆபரண வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல பலனை பல்லாண்டுகளாக அளித்து வருகிறது.

வலது கை விரல்களில் மோதிரம் அணிந்தால் ஆயுள் விருத்தியாகும் என்ற நம்பிக்கையும் உண்டு. அதனால்தானோ என்னவோ பெரும்பாலான அரசியல்வாதிகளின் வலது கை விரல்களில் மோதிரங்கள் மின்னுகின்றனவோ என்னவோ?

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.