கல்லிலே கலைவண்ணம்…

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்தவர் ஐயாக்குட்டி முருகன் (56). பாரம்பரிய சிற்பக் கலையின் பரம்பரையைச் சேர்ந்த இவர் திருப்பரங்குன்றம் புறவழிச் சாலையில் கலைவாணி சிற்ப கலைக்கூடம் என்ற பெயரில் அமைத்துள்ளார். இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

முருகனின் அயராத உழைப்பால் பழம்பெருமை பேசும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் பல்வேறு கல் சிற்பங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. தொங்கும் ஒரே கல்லில் ஆன சரவிளக்கு. மற்றொரு தொங்கும் சரளத்தில் கீழே கல் உருண்டை சுழலும் வகையிலான வடிவமைப்பு, ஒரே கல்லில் உள்நாக்கு பொருத்தப்பட்ட மணி என கலைநயம் கண்ணை கவர்ந்து வருகின்றன.

இதுகுறித்து முருகன் கூறுகையில், தமிழக கலை மற்றும் பண்பாட்டில் சோழர் கால நாகரிகம் மிகவும் பெருமை வாய்ந்தது. அவர்கள் கட்டிய கற்கோபுரங்கள் உலகளாவிய பெருமை பெற்றது. தஞ்சை பெரிய கோபுரம். ஜெயங்கொண்டம் ராஜராஜ சோழபுரம் ஆகியவற்றில் அமைந்துள்ள கற்சிலைகள் மிகவும் துல்லியமான தொழில்நுட்பத்துடன் நமது பாரம்பரியத்தின் கலை வெளி உலகிற்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன . ஸ்ரீரங்கத்தில் உள்ள கோபுரங்கள் மற்றும் கோயில் சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன.

இதனை முன்மாதிரியாக வைத்து 3 அடி உள்ள கல்லில் தொங்கும் சரவிளக்கு (சங்கிலி விளக்கு), 4 அடி உயரமுள்ள விளக்கு தயாரித்துள்ளோம். இதனை படைப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் பல கற்கள் உடைந்துபோன பின்னரே இதை உருவாக்க முடிந்தது. இதேபோல் போல் தொங்கும் சரள குடுவையின் உள்ளே சுழலும் கல் உருண்டை இருக்கும் வகையில் தயாரித்துள்ளோம்.

இதேபோல் ஒன்றேகால் அடி உயரமும், 1 அடி விட்டமுள்ள மணி ஒன்றும் உருவாக்கியுள்ளோம். இதனுள் மணியின் நாக்கு பகுதி பொருத்துவது மிகவும் கடினமான பணியாகும். அதனை பெருமுயற்சி செய்து வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். இவற்றை உருவாக்க பொருட்செலவும், கடினமான உழைப்பும் தேவைப்பட்டது.

தமிழக அரசு எங்களுக்கு ஆக்கமும்,ஊக்கமும் தந்து உதவி புரிந்தால் இந்த அரிய கலையை மீண்டும் உயிர்ப்பிக்க தயாராக உள்ளோம். சிலை செய்வதற்கான கற்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. சிலை செய்யக் கூடிய கற்கள் கிரஷர் ஜல்லிக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றன.

சிலை செய்வதற்கான கற்கள் எங்களுக்கு கிடைக்க அரசு வழிகாண வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாரம்பரிய வடிவமைப்பு சிலைகளை அமைக்க அரசு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். கலைநயமிக்க கற்சிற்பங்களை அரசின் பூம்புகார் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலம் விற்பனை செய்ய உதவிபுரிய வேண்டும் என்றார் அவர்.

 

 

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.