அண்ணனை தம்பி நலம் விசாரித்தாரா?


சென்னை: மு.க.அழகிரி உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்ட அவரது சகோதரரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
இது உண்மையாக இருக்குமெனில் நலம் விசாரிப்பு குடும்ப உறவில் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, வரும் சட்டப் பேரவை தேர்தல் வரையிலான அரசியல் திருப்பங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
திமுகவின் பொதுச் செயலராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன், அனைத்துக் கட்சியினராலும் விரும்பத்தக்கவர். அவரது நகைச்சுவை ஆற்றலும், எந்த அரசியல் தலைமையையும் நாகரீகத்துடன் விமர்சிக்கும் பக்குவத்தையும் கொண்டவர் என்பதால் எல்லாக் கட்சித் தலைவர்களுமே இக்கட்டான காலக்கட்டங்களில் திமுக தலைமையுடன் தொடர்புகொள்ள வேண்டிய சூழலில், துரைமுருகனையே அணுகுவது வழக்கம்.
அந்த வகையில் துரைமுருகன் பொறுப்பேற்றதும் ரஜினியும் கூட வாழ்த்துத் தெரிவித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்நிலையில், வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வியூகங்களை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்து வரும் நிலையில், அந்த வெற்றிக்கு தடையாக யாரும் இருந்துவிடக் கூடாது. குறிப்பாக குடும்ப சொந்தங்கள் இருந்துவிடக் கூடாது என்ற கவலையும் மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், திமுகவுக்கு தேர்தல் நேரங்களில் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கும் மு.க. அழகிரியை சமாதானம் செய்வது வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன் அவசியம் என்பதை அக்கட்சி உணர்ந்துள்ளது.

இச்சூழலில்தான் மு.க.அழகிரியை சமாதானம் செய்வதற்கு திமுகவின் புதிய பொதுச் செயலர் துரைமுருகன் மேற்கொண்ட முயற்சிகள் பலனிப்பதாகக் கூறப்படுகிறது.
இம்முயற்சியின் விளைவாக மு.க. அழகிரிக்கு சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இது பாச உணர்வு கொண்டதாக இருப்பினும், அரசியலிலும் வரும் சட்டப் பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுகவின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற ஒருசில கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. இதற்குக் காரணம் அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-இபிஎஸ் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், அதில் தங்களுக்கு சாதகமான அணியை மத்திய ஆளும் கட்சி பயன்படுத்திக் கொள்ள தயாராகும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகின்றனர். போதாக் குறைக்கு சசிகலா தேர்தலுக்கு முன் விடுதலையாகும் சூழலும் நிலவுகிறது. அவர் வெளியில் வந்தால் நிச்சயமாக அதிமுகவில் பெரிய சலசலப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திமுக தங்களுக்கு பாதகமான அம்சங்களை பட்டியலிட்டு அவற்றை களைய முற்பட்டுள்ளது. அதில் ஒன்றாக மு.க.அழகிரியை அரவணைக்கும் திட்டமும் இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.