மதவழிபாட்டு தலங்களுக்கு புதிய விதிமுறை

புதுதில்லி: கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின்போது மூடப்பட்ட மதவழிபாட்டு தலங்களை வரும் ஜூன் 8-ஆம் தேதி மீண்டும் திறக்கும்போது ஒருசில விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:
மதவழிபாட்டு தலங்களின் நுழைவாயில்கள் சானிடைசர் மூலம் தொடர்ந்து தூய்மை செய்யப்பட வேண்டும். அத்துடன் வெப்பமானி மூலம் பரிசோதிக்க வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே வழிப்பாட்டு தலத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஒலிப்பதிவுகள், விடியோ பதிவுகளை ஒலி, ஒளிபரப்ப வேண்டும். அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட்டுவர வேண்டும். இல்லையெனில் குடும்பவாரியாக தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியுடன் கூடிய முறையான வாகன நிறுத்துமிடம் இருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களை சுற்றிலும் செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் தக்க இடைவெளியுடன் நிற்க தரையில் வட்டம், சதுரம் போன்ற குறியீடுகள் வரைந்திருக்க வேண்டும். நுழைவாயில், வெளியே செல்லும் வழி தனித்தனியே இருக்க வேண்டும்.
வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் சுத்தம் செய்ய வேண்டும். இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
குளிர்சாதன வசதியை பயன்படுத்தினால், 24 முதல் 30-க்குள்ளான செல்சியஸை பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழைவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும்.
வழிபாட்டு தலங்களில் உள்ள சிலைகள், சிற்பங்கள், புத்தகங்கள், இதர பொருள்களை தொட அனுமதிக்கக் கூடாது.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை. பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை. பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.
வழிபாட்டு தலத்தில் ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை எடுத்துச் செல்ல வேண்டும்.
சமுதாய கூடங்கள், அன்னதானக் கூடங்களில் பார்சல் உணவுப் பொட்டலங்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க வேண்டும்.
கழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரிக்க வேண்டும். அந்த இடங்களில் பயன்படுத்துவதற்கு கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.