102 ஆண்டுகளுக்கு முன் உலகம் சந்தித்த கொடுமையைத்தான் இப்போதும் சந்திக்கிறது

வரலாறு முக்கியம் அமைச்சரே…

ஸ்பானிஷ் ஃப்ளூ என பெயரிடப்பட்ட வைரஸ் தொற்று 1918-இல் முதலில் ஸ்பெயினில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முதலில் எங்கிருந்து பரவியது என்பது அக்காலத்தில் யாருக்கும் தெரியாது.


முதல் உலகப் போர் காலத்தில் பரவிய இந்நோய் தாக்குதலால் உலகில் மனிதர்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்த விஷயங்களை அப்போது ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் உள்ள அனைத்து நாளிதழ்களும் விரிவாக பதிவு செய்தன. ஸ்பெயினில் தான் முதல் உயிரிழப்புகள் தொடங்கின.


உலகம் முழுவதும் 1.5 கோடி முதல் 5 கோடி பேர் வரை அன்றைய காலகட்டத்தில் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நோய்த் தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கப்பல் வழியாக இந்தியா திரும்பிய ராணுவத்தினர் மும்பையில் இறங்கியபோது அவர்களுக்கு அந்த காய்ச்சல் இருந்தது. இதில் அவர்களில் பலரும் உயிரிழந்தனர்.

அதையடுத்து மெல்ல தென்னிய கடலோரப் பகுதிகளில் பரவியது. இந்தியாவில் மட்டும் 1.5 கோடி மக்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. அதாவது அன்றைய இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் உயிரிழந்தார்கள். இந்த காய்ச்சலில் மகாத்மா காந்தியும் பாதிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.


அன்றைய காலகட்டத்தில் இன்றைய மருத்துவ வசதிகளை விட மிகமிகக் குறைவான வசதிகளே இருந்தன. அதேபோன்றதொரு தீவிரம் உலக நாடுகளில் தற்போது உள்ளது. ஆனால் அன்றைய காலகட்டங்களில் கடல்வழியாக கப்பல்களில் வரும் பயணிகள் மூலமே ஸ்பானிஷ் ஃப்ளூ பரவியது.


இன்றைக்கு உலகம் வேகமாக முன்னேறியதன் விளைவாக நாள்தோறும் பல லட்சம் பேர் விமானம் மூலம் உலகில் பயணிக்கும் சூழலைக் கணக்கில் கொண்டால் தற்போதைய பாதிப்புகள் குறைவே. காரணம் இன்றைக்கு வளர்ந்துள்ள தொழில்நுட்பம் உடனுக்குடன் ஒரு தீர்வுக்கு வழி வகுத்துள்ளது. ஆனால் அன்றைக்கு ஒரு நோய்த் தொற்றை எதிர்கொள்ள மருத்துவத் துறை எப்படி இன்னல்களைச் சந்தித்ததோ, அதை விட பல மடங்கு இன்னல்களை இன்று சந்தித்து வருகிறது.

இயந்திரங்களை கண்டுபிடித்த மனிதனால் இன்னமும் இயற்கையின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை அறிந்துகொள்ள எப்போது முயல்கிறானோ அப்போதுதான் இதுபோன்ற பாதிப்புகளை வருங்காலம் சந்திக்காமல் இருக்கும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.