‘சூரப்பாவுக்கு எதிரான விசாரணைக்குழு அமைப்பு நியாயமற்றது’
விசாரணையை முடித்துக்கொள்ள தமிழக முதல்வருக்கு ஆளுநர் கடிதம்
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது அதன் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா மீது நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு விசாரணைக் குழு அமைப்பது தொடர்பான தனது அதிருப்தியை முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதும், விசாரணையை முடித்துக்கொள்ள கேட்டுக் கொண்டதும் தெரியவந்துள்ளது.
பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காக சூரப்பா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே ஆளுநர் பாராட்டியிருந்தார். இச்சூழலில் கடந்த வாரம் முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விசாரணை சரியானதல்ல, இதனை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும் என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளாராம். ஆனால் இதுதொடர்பாக மாநில அரசுத் தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
ரூ.200 கோடி ஊழல் தொடர்பாக துணைவேந்தருக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகத் தீவிரமானவையாக கருதிய அரசு, கடந்த நவ.11-இல் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
சூரப்பா மீது எழுப்பப்பட்டுள்ள புகார்களை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த 5-ஆம் தேதி டிவிட்டர் பதிவு செய்திருந்தார். அதில் அவர் சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? எனக் கேள்விக் கேட்டு அவர் பதிவிட்டுள்ள விடியோவில், நேர்மையாக இருந்தால் இது தான் நிலையா. நேர்மையாக இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன் என்றும் ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார்.
You must log in to post a comment.