வியட்நாமில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம்!
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டெடுப்பு
புதுதில்லி: வியட்நாமில் சாம் கோயில் வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) அண்மையில் நடத்திய ஆய்வில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணற்கல் சிவலிங்கத்தை கண்டெடுத்துள்ளது.
சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் ஆட்சியாளராக இருந்த மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவாங் நாம் மாகாணத்தில் புகழ்பெற்ற டோங் டுவோங் புத்த மடாலயத்தையும் அவர்தான் கட்டியுள்ளார். 1903-04-ஆம் ஆண்டில் பிரெஞ்சு வல்லுநர்கள் இக்கோயில் வளாகத்தை மிகவும் பாழடைந்த நிலையில் கண்டறிந்தனர். அப்போது நடந்த அகழ்வாராய்ச்சியின்போது அப்பகுதியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறினார். ஆனால் அப்போது அதை மீட்டெடுக்க முடியாமல் போனது. வியட்நாமில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களும், போர்களும் கோயில் வளாகத்தை மேலும் சிதலமடையச் செய்தன.
இந்திய தொல்பொருள் ஆய்வு மைய ஆய்வாளர்கள் மீட்டெடுத்த சிவலிங்கம் தொடர்பான படங்களை இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதோடு, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் இது இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாசார உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வு மையத்தின் 4 பேர் கொண்ட குழு, வளாகத்தில் இரண்டு தனித்தனி குழுக்களாக செயல்பட்டு கோயில் மறுசீரமைப்பு, பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
You must log in to post a comment.