அரசு உதவியை எதிர்நோக்கும் சிலம்பாட்ட கலைஞர்கள்
சோழவந்தான்: ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிலம்பாட்ட கலைஞர்கள் அரசு நிவாரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழ் கலாசார விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தீப்பந்தம், சுருள் கத்தி வீச்சு போன்ற விளையாட்டு கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர்.
கொரோனா தொற்று நோய் பரவல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கி அன்றாட வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளது. அதேபோல் சிலம்பாட்டக் கலைஞர்களும் முடங்கிப்போய் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்து இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ராஜாங்கம் (60) சிறுவயதில் இருந்து பல கலைஞர்களிடம் பல வித்தைகள் கற்றுள்ளார். கற்ற வித்தைகளை பல ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.
இந்தக் கலைகள் மூலம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், நீலகிரி போன்ற பெரு நகரங்களில் நடக்கக்கூடிய அரசு விழாக்களில் கலந்து கொண்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். அவர் சிலம்பாட்டம் போன்ற அரிய கலைகளைக் கற்றுத் தேர்ந்த கலைஞர்கள் இந்த கொரோனா காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாகக் கூறுகிறார்.
வழக்கமாக தை முதல் 6 மாதங்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் செய்வர். இவவாண்டு எந்த அழைப்பையும் ஏற்க முடியவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, அன்றாட செலவுகளுக்கு பணம் இன்றி அவதிப்படுகின்றனர். வாழ்வாதாரம் பின்தங்கிய கலைஞர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.40 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்கி காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.
You must log in to post a comment.