கொரோனா தடுப்புப் பணியி்ல் மகளிர் குழுக்கள்
அலங்காநல்லூர், ஜூன் 5: அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 94 பெண்கள் நோய் தொற்று கண்டறிய கூடிய பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்து சில நாள்களாக அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வெளியூர்களில் இருந்து வந்த நபர்களுக்கும் உள்ளுரை சேர்ந்த சிலருக்கும் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோய் தொற்றை கண்டறியும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பேரூராட்சி உதவி இயக்குநர் ஆலோசனையின் படி அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 94 பெண்கள் நோய் தொற்று கண்டறிய கூடிய பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள பெண்கள் பேரூராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் ஒரு நபருக்கு 75 வீடுகள் வரை கணக்கீடு செய்து அங்கு குடியிருக்கும் மக்களுக்கு காய்ச்சல், தொடர் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களது முகவரி மற்றும் விவரங்களை சேகரித்து சுகாதாரத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்று கண்டறியப்படும் சூழ்நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்டவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வட்டார மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்தும் செயல் விளக்கம் தரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் துளசிராமன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சின்னச்சாமி பாண்டியன், ஜெயமுருகன், ஆகியோர் ஆலோசனை வழங்கி நோட்டு புத்தகம், பேனா, முகக் கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராமன், இளநிலை உதவியாளர் ராஜா, தூய்மை பணி மேற்பார்வையார் கனகராஜ், வாசிமலை வரிதண்டலர் கண்ணன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்….

You must log in to post a comment.