சாத்தான்குளம் சம்பவம்: உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது
சாத்தான்குளம், ஜூலை 1: சாத்தான்குளத்தில் தந்தை, மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனையும் விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கையை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடையைத் திறந்து வைத்ததற்காக விசாரணைக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
அதைத் தொடர்ந்து 3 மருத்துவர்கள் முன்னிலையில் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜின் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இந்த அறிக்கை சீலிட்ட கவரில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள், பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தங்களிடம் தாக்கல் செய்த பிரேத பரிசோதனை அறிக்கையில், தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கும் தகவலை தெரிவித்தனர். காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் ரேவதி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் வழக்கின் முக்கிய சாட்சியமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் காவல் ரேவதி சாட்சியம், மாஜிஸ்ரேட் விசாரணை அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தாமதம் இன்றி தொடங்க உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினார். இந்த விசாரணையை அடுத்து சிபிசிஐடி வழக்குப் பதிந்தது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.. வழக்கில் தொடர்புடைய மீதி 5 பேரையும் கைது செய்வதற்கும் சிபிசிஐடி போலீஸார் ஆயத்தமாகியுள்ளனர்.
You must log in to post a comment.