வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம்!

தூத்துக்குடி: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காவல்நிலையத்தை வருவாய்த் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளத்தை சேர்ந்தவர்கள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மேல் திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை பதிவு செய்து வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். மேலும், வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நேரடியாக சாத்தான்குளம் செல்ல வேண்டும். அவர் அங்கு தங்கியிருந்து, காவல் நிலையத்திலும், இறந்தவர்களின் உறவினர்களிடமும் நேரடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை புகைப்படம் எடுத்தும், விடியோ பதிவுகளை செய்தும் பாதுகாக்க வேண்டும் என்றும் கடந்த 26-ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சிபிஐ வசம் தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில், சாத்தான்குளத்தில் தங்கி, இந்த வழக்கு விசாரணைக்கான சாட்சியங்களின் சேகரிப்பில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஈடுபட்டார். அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவர் சில ஆவணங்களை போலீஸாரிடம் கேட்டபோது, அவற்றை தரமறுத்ததாகவும், மாஜிஸ்திரேட் விசாரணையைத் தடுக்கும் வகையில் பேசியதாகவும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மதுரை உயர்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு புகார் தெரிவித்தார்.

 இப்புகார் நிர்வாக நீதிபதியிடம் எடுத்துச் செல்லப்பட்டது. நீதிபதிகளின் உத்தரவின் பேரில், அப்புகார் குற்றவியல் அவமதிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் உடனடியாக விசாரணைக்கு ஏற்றனர்.

விசாரணையை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவலர் மகாராஜன் ஆகியோர் மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அவர்கள் மூவரையும் பணியிட மாற்றம் செய்தால் மட்டுமே இவ்வழக்கு விசாரணை எவ்வித தடையும் இன்றி நடைபெறும். எனவே உடனடியாக அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார்,  துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். காவலர் மகாராஜன் படையிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் விளக்கம் அளித்துள்ளார்.

Spread the love

பதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி

வெ நாராயணமூர்த்தி நிலைக் கொள்ளாமல் நம் மனம் சதா அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது. நீருக்கே உரிய குணங்கள் மாறி மழைக் காலத்தில் காணும் வெள்ளப் பெருக்கு போல, வேகமாக, […]

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.