இப்போதைய தேவை பாதுகாப்பு மட்டுமே: வியாபாரிகள்

செங்கல்பட்டு: சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போதைய சூழலில் வருமானத்தை விட பாதுகாப்பே முக்கியமானது என புதுபெருங்களத்தூர் வியாபாரிகள் கூறினர்.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். வருமானத்தை விட ஆரோக்கியம் முக்கியமானது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

கடைகளை அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திறந்து வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை கடைப்பிடிப்பதோடு, பொதுமக்கள் முகக் கவசம் அணிந்துதான் கடைக்கு வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம்.

பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்கலாம் என்பதால் வணிகம் பாதிக்கும். இருப்பினும் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால்தான் இத்தகைய கட்டுப்பாடுகளை அரசு விதிக்கிறது என்று புதுபெருங்களத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்துவிட்டது. இதற்குக் காரணம் வேலை இல்லை. வேலை இல்லாத காரணத்தால் வருமானம் வருவதற்கு வழியில்லாமல் போய்விட்டது. இதனாலும் வியாபாரம் பாதிப்பை சந்தித்து வருகிறது. எதிர்பார்த்த சரக்குகள் வருவதில்லை. ஒருசில பொருள்களில் முன்பு கிடைத்த லாபம் கூட தற்போது கிடைப்பதில்லை என்கின்றனர் பலசரக்கு விற்பனையாளர்கள்.

பல நெருக்கடிகளுக்கு இடையே காய்கறிகளை விற்க வேண்டியுள்ளது. விற்பனைக்கு வாங்கிய பொருள்கள் பல நேரங்களில் அழுகிப்போய்விடும். தேவையான வரத்து பல நேரங்களில் இருப்பதில்லை. இவற்றையெல்லாம் எங்கள் வணிகத்தில் சந்திக்க வேண்டியுள்ளது என்கிறார் காய்கனி விற்பனையாளர் சரஸ்வதி.

தற்போது வியாபாரம் முக்கியமானதா, உயிர் முக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட சூழலில் வியாபாரத்துக்கு இரண்டாவது இடம்தான் நாம் தர வேண்டும் என்கிறார் பெட்டிக் கடைக்காரர் சிவஞானம்.

அரசு மக்களை நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்ற எத்தகைய கட்டுப்பாடுகள் விதித்தாலும், சிலர் அதை கடைப்பிடிக்காதது வருத்தம் அளிக்கிறது. நம் நலனுக்கான கட்டுப்பாடு இது என அவர்கள் உணர்ந்தால்தான் நோய் விரைந்து கட்டுப்படுத்த முடியும் என்றனர் வியாபாரிகள்.safety

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.