மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கு மேல் சாந்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கெ.ஜெயராஜ் போற்றி, எம்.ரஜிகுமார் ஆகியோரின் அபிஷேக சடங்கு சந்நிதானத்தில் நடைபெறுகிறது.
அதையடுத்து 18-ஆம் படிக்கு கீழ் உள்ள ஆழியில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டுகிறார். இதைத் தொடர்ந்து நடை அடைக்கப்படுகிறது.
திங்கட்கிழமை (நாளை) அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. இதை மேல்சாந்தி வி.கெ.ஜெயராஜ் போற்றி திறந்து வைக்கிறார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நாள்தோறும் வழக்கமான பூஜைகளைத் தொடர்ந்து உஷபூஜை, உச்ச பூஜை, நெய் அபிஷேகம் புஷ்ப அபிஷேகம், உதயா ஸ்தமன பூஜை, சகஸ்ர கலசபூஜை, படி பூஜை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அதைத் தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மண்டல பூஜை டிசம்பர் 26-ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
அனுமதிக்கப்படும் பக்தர்கள் கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மருத்துவச் சான்று இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கிருமி நாசினியை ஒவ்வொரு பக்தரும் கையில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆகியன வேண்டுகோள் விடுத்துள்ளன.
You must log in to post a comment.