பணி ஓய்வா? கட்டாய பணி நீக்கமா? கலங்காதீர்கள்!
சென்னை: இயந்திரமயமான இந்த உலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பணி, தனியார் பணி எனப் பார்த்துவிட்டு ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் இப்போதே ஓய்வு காலத்தை எப்படி பயன்படுத்தலாம் என திட்டமிடுங்கள்.
பெரும்பாலும் அரசுப் பணிக்கு செல்பவர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், வேறு ஏதேனும் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என மீண்டும் பணிக்குச் செல்லும் வாய்ப்பை தேடுவது உண்டு. இது பெரும்பாலும் அவர்களின் குடும்பச் சூழலை பொறுத்து அமைகிறது.
ஒருசில தனியார் நிறுவனங்கள் ஓய்வுபெறும் வயதை எட்டியவர்களுக்கு பல நேரங்களில் பணிநீட்டிப்பு செய்வதுண்டு. அது அந்தப் பணியாளரின் பணித் திறமையைப் பொறுத்தே அந்த வாய்ப்பு கிட்டும். (ஒருசில இடங்களில் வேலைவாய்ப்பை நீட்டிக்கும் அதிகாரம் படைத்தவருக்கு பணித் திறமையைக் காட்டிலும், நன்றாக காக்காய் பிடிப்பவர்களையே பிடிக்கும். அப்படிப்பட்டவர்களிடம் பணியில் நீடிக்க விரும்புவர், பல நேரங்களில் தன்மானத்தை விட்டுக் கொடுக்கும் மனநிலை கொண்டவராக மாறத் தயாராக வேண்டும்).
இயந்திரங்களோடு பழகி வந்தவர்களுக்கு இத்தகைய தகுதிகள் பெரும்பாலும் தேவையிருக்காது. அவர்கள் இயந்திரங்களை பராமரிப்பதில் திறமைசாலிகளாக இருந்தால் போதும்.
ஓய்வுபெறும் வயதை எட்டுவோர் பலர் குடும்பச் சூழல், மகன், மகள் படிப்பு, திருமணம், மகனுக்கு அல்லது மகளுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற பின்னணி காரணமாக தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட ஊதியம் கிடைக்கும் வகையிலான பணியைத் தொடர வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

இவர்களில் ஒருசிலருக்கு பணி ஓய்வு நெருங்கும்போது தேவையற்ற பதற்றம் ஏற்படுவதுண்டு. குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி ஏற்படும் கவலைகள் மனஅழுத்தம் ஏற்படுத்தி உடல்நலத்தை பாதிக்கச் செய்வதும் உண்டு. இதுபோன்ற மனநிலை கொண்டிருப்பவர்கள்தான் ஒருசில நேரங்களில் மாரடைப்பில் உயிரிழப்பைச் சந்திப்பதும், அதுவரை அவரது உடலில் மறைந்திருந்த நோய் திடீரென வெளிக்காட்டுவதும் காரணம்.

உயிரற்ற இயந்திரத்துக்குக் கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வு தேவைப்படுகிறது. அத்துடன் அதை புதுப்பிப்பதும் அவசியமாகிறது. அப்போதுதான் அந்த இயந்திரம் நீண்டகாலம் உழைக்கும் தன்மையுடையதாக இருக்கும். இல்லாவிட்டால், அது பாதியிலேயே செயலிழந்து புதுப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு பயனற்றதாகிவிடும்.
அதனால்தான் மனிதனுக்கு வாரம்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஓய்வு தேவைப்படுகிறது. உளவியல் ரீதியாக இந்த ஓய்வு நேரம் அவனுக்கு மறுவாரம் முழுவதும் உற்சாகமாக பணிபுரியும் உடல் தகுதியையும், பணியில் முழுகவனமும் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இது அரசு அல்லது தனியார் அலுவலகங்கள் எதுவாக இருப்பினும் சாதாரண ஊழியர்களுக்கான சூழல்.
இதில் உயர்பதவிகளில் பணிபுரிவோரை சேர்க்கக் கூடாது. அவர்கள் பணிபுரிவதே பெரும்பாலும் ஒருசில மணிநேரமே இருக்கும். அத்துடன், அவர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் அவர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
சாதாரண தொழிலாளி முதல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வரை ஓய்வுபெறும் வயதை எட்டும்போது குடும்பச் சூழலும், பணமும் மட்டுமே அவருக்கு பிரச்னைக்குரியவையாக இருக்கும்.
ஆனால் உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு பணமோ, குடும்பச் சூழலோ பெரும்பாலும் பிரச்னையாக இருக்காது. மாறாக சமுதாயத்தில் கௌரவம், அந்தஸ்து, அதிகாரம் போன்றவை விரைவில் பறிபோகப்போகிறது என்பதுதான் அவர்களுக்குரிய பிரச்னையாக இருக்கும். அதை விட முக்கியமானது இதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு கூட இயலாத சூழல் இருக்கும்.
ஆக, உயர் பதவியில் இருந்தாலும், சாதாரண பதவியில் இருந்தாலும் பணி ஓய்வு என்பது பதற்றமான சூழலை உருவாக்கும் என்பதுதான் நிதர்சனம்.
குடும்பச் சூழல், பணப் பற்றாக்குறை போன்ற காரணங்களைப் பின்னணியாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெறும் வயதை எட்டுவோர் குறைந்தபட்சம் 6 மாதம் முன்பே திட்டமிடல் அவசியம். இதில் பதற்றமான ஒரு மனநிலையைக் கொள்ளக் கூடாது.

தன்னுடைய வருவாய் நம்பியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து எதிர்காலத்தை திட்டமிடுவது குறித்த வெளிப்படையான கலந்தாலோசனை செய்வதன் மூலம் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல தீர்வை அளிப்பர்.
குறிப்பாக மகன், மகள் ஆகியோரிடம் தன்னுடைய ஸ்தானத்தை விட்டுக்கொடுத்து தோழமையோடு பழகுவோருக்கு இது மிக எளிதான காரியம். இதில் ஆக்கப்பூர்வமான ஒரு மாற்ற வழி நிச்சயமாகக் கிடைக்கும்.
அப்போதைய சூழலில் மாற்றுவழி கிடைக்காதபட்சம் மட்டுமே தற்காலிகமாக மீண்டும் ஒரு பணிக்குச் செல்லும் முடிவை எடுப்பது புத்திசாலித்தனம்.

மாற்று வழி கிடைக்கும் சூழலில், புதிதாக ஒரு தொழில் தொடங்குவது, தனது பணி அனுபவத்தில் கிடைத்த அறிவை நல்ல முறையில் பயன்படுத்த முற்படுவது, ஓய்வு நேரத்தை புத்தக வாசிப்பு மூலமோ, உறவுகளிடம் பேசிக்கொண்டிருப்பதன் மூலமோ தனிமையை விரட்டுவது, உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான நடைமுறைகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
இருப்பினும், ஓய்வு வயதை எட்டியப் பிறகு ஓய்வுக்கே முழு நேரத்தை செலவிடுவதும் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஓய்வு என்ற தளர்வு நிலை கிடைக்கும்போது உடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு, மனதை ஒருநிலைப்படுத்துதல், பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை மீட்டெடுத்தல் புத்திசாலித்தனம். இது மீண்டும் ஒரு புதிய பாதையில் உற்சாகத்தோடு எதிர்நீச்சல் போவதற்கு உதவும்.
எப்படி இயந்திரம் சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகோ, புதுப்பிப்புப் பணிக்கு பிறகோ மீண்டும் புத்துயிர் பெற்று தடையின்றி இயங்குகிறதோ அதுபோல இயங்கத் தயாராக வேண்டும்.
இல்லாவிடில் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கும் இயந்திரம் ஒருநிலையில் பழுதடைந்து நின்றுபோகும்போது அதை நம்பியிருப்போர் பெரும் பாதிப்பை சந்திப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அது சரி…. ஓய்வு பெறும் வயதை எட்டியவர்கள்தான் இந்த நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டுமா? என கேட்பது புரிகிறது.
பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த சூழலில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக அந்நிறுவனங்களால் பழிவாங்கப்பட்டோ, ஒரே நாளில் பணியில் இருந்து நீக்கப்பட்டோ செய்வதறியாது தவிக்கும் 40 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றலாம். வயது மட்டுமே வேறுபாடே தவிர, சூழல் ஒன்றுதான்.
தற்போது அவர்களுக்கு கிடைத்துள்ளது அரிய வாய்ப்பு. அவர்கள் தற்போதைய நிலையைக் காட்டிலும் வேகமாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான மாற்று வழியை கண்டுபிடிப்பதற்காக கிடைத்துள்ள வாய்ப்பாக இதை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான மனஉந்துதலையும், விடாமுயற்சியையும் மேற்கொண்டவர்கள் தோல்வியை தழுவ வாய்ப்பை இல்லை.

ஓய்வுபெறும் வயதுக்கு முன்பே வேலைவாய்ப்பை இழந்தவர்கள், இனி வருங்காலத்தில் உழைக்கத் தயாராவதற்கான திடமான மனநிலையைக் கொள்வதோடு, சுயசார்புதன்மையை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தேடத் தொடங்க வேண்டும். தனக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்போக்கில் நழுவ விடக் கூடாது.
எப்போதும் நம் கண்களுக்கு இரு பாதைகள் தெரியும். நாம் எது சரியான பாதை என எண்ணி செல்கிறோமோ, அது நம் நேரம் சரியில்லாதபோது தடைப்பட்ட பாதையாகப் போவதுண்டு.

அடுத்துவரும் வாய்ப்புக்கான பாதையைத் தேடும்போது, பிரதானச் சாலைக்கு அருகே அணுகுச் சாலை செல்வதுபோன்ற வாய்ப்பைத் தேட வேண்டும். பிரதானச் சாலையில் தடை ஏற்பட்டாலும், அணுகுச் சாலை வழியே வாழ்க்கைப் பயணத்தை இடையூறின்றி தொடரலாம் அல்லவா!
You must log in to post a comment.