தினமணி முன்னாள் ஆசிரியர் இராம. திரு. சம்பந்தம் நினைவு நாள்
தினமணி முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தம் மறைந்த நாள் இன்று (மறைவு 2007-ஆம் ஆண்டு). இராம. திரு. சம்பந்தம் அல்லது இராம. திருஞானசம்பந்தம் தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர். தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். பல இளம்தலைமுறை பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். பத்திரிகை நிருபராக ஆகும் ஆர்வம் இருந்தாலே போதும் அந்த இளைஞர்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்தவர். இன்றைக்கு பத்திரிகை, ஊடக உலகில் கோலோச்சும் பல பத்திரிகையாளர்கள் அவருடைய வார்ப்புகள்தான்.
இராம. திரு. சம்பந்தம் புதுக்கோட்டை மாவட்டம், நெற்குப்பை சிற்றூரில் பிறந்தவர். மேலைச் சிவபுரியில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்று, மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். தனது 22- ஆவது வயதில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய “தமிழ்நாடு’ நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும், சென்னையிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார். பின்னர், 1960-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான “இந்தியன் நியூஸ் சர்வீஸில்’ இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார்.
1961-இல் “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், செய்திப் பிரிவுத் தலைவர் என்று பல நிலைகளுக்கு உயர்ந்தார். பின்னர், “தினமணி’யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, 2004-இல் தனது 69-ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.
அவர் தினமணி ஆசிரியராக பொறுப்பு வகித்த காலத்தில் தினமணி நாளிதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்ததோடு, அதில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும், புதிய மலர்களை ஆண்டுதோறும் வாசகர்களுக்கு அளிக்கும் பணியையும் மேற்கொண்டார். அவரது காலத்தில் தினமணி பத்திரிகையில் பணியாற்றிய திறமையாளர்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம் என்கிறார் அதில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர்.
அவர் தனது பத்திரிக்கைப் பணியில் எந்தவித சமரசத்துக்கும் ஆட்படாதவராக இருந்தார். சமுதாயத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடித்து மேற்படிப்பு படிக்க உதவி கோரும் நிலையில், அவற்றை செய்தியாக வெளியிட்டும், அக்குழந்தைகளுக்கு உதவி செய்ய கல்வி புரவலர்கள் பலரை நேரடியாக தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தும் உதவியவர். அவரால் இன்றைக்கு நூற்றுக்கணக்கானோர் பொறியாளர்களாக, மருத்துவர்களாக உலா வருகின்றனர்.
யாரும் எளிதில் அணுகும் ஆசிரியராகவும், நேர்மையின் உறைவிடமாகவும், மிகக் குறைந்த வரிகளைக் கொண்ட செய்திகளை உருவாக்கி அந்நாளிதழில் ஏராளமான செய்திகளை அளித்த பெருமைக்குரியவர்.
அவர் தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை “தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தவர். இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார்.
அவர் தனது மறைவுக்குப் பிறகு உடலை தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார். சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறைந்ததை அடுத்து அவரது உடல் சென்னை ராமச்சந்திரா (Sri Ramachandra) மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
பத்திரிகை உலகம் இருக்கும் வரை மறக்க முடியாதவர். யாராலும் மறைக்க முடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்ட மாமனிதர் – ஆர்.எம்.டி என அன்போடு அழைக்கப்படும் மறைந்த இராம. திரு.சம்பந்தம்.
சிறப்பு நாள்
பாகிஸ்தான் – விடுதலை நாள் (1947)
கொங்கோ – விடுதலை நாள் (1960)
பராகுவே – கொடி நாள்
பிற நிகழ்வுகள்
1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
1908 – முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.
1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.
1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.
1937 – ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1945 – பசிபிக் போர் முடிவுற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1969 – வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2006 – இஸ்ரேல் – லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.
You must log in to post a comment.