ரஜினியின் பாராட்டுக்குரிய முடிவு!
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கிய, 1990-களிலேயே, தலைவா… வருங்கால முதல்வரே… என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டத் தொடங்கி அவரை அரசியலுக்கு இழுக்கத் தொடங்கினர்.
அன்று முதல் இன்றுவரை எந்த அரசியல்வாதியும் எதிர்கொள்ளாத கேள்விக் கணைகளையும், விமர்சங்களையும் அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார். இப்போது அவர், ‘நான் கட்சி ஆரம்பித்து. அரசியலுக்கு வரமுடியவில்லை’ என அறிக்கை வெளியிட்ட நிலையில், கணக்கில் அடங்கா மீம்ஸ்கள், விமர்சனங்கள் இணைய உலகை ஆக்கிரமித்து வருகின்றன. இது ரஜினிக்கு புதிதல்ல.
ஆனால், அவரை இதுவரை உசுப்பேத்தி வந்த ஊடகங்களையும், அரசியல் லாபத்தை ரஜினி மூலம் சம்பாதிக்கக் காத்திருந்தவர்களையும் அவரது அறிக்கை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
தமிழக அரசியலில் பல பத்தாண்டுகளாக வலிமையான கட்சிகளில் ஏற்படும் சலசலப்பை பெரிதாக்கி, புதிய அரசியல் கட்சிகளை உருவாக்குவதில் வல்லமைப் படைத்த எழுத்தாற்றல், சொல்லாற்றல் மிக்கவர்கள் நிறைந்தது தமிழகம். நடிகர் ரஜினிகாந்தை உசுப்பேத்தி வந்ததுபோல், அன்றைக்கும் பலரை உசுப்பேத்தியதன் விளைவாக உருவானவைதான், இன்றைக்கு ஒற்றை இலக்க சதவீத வாக்கு வங்கிகளை மட்டுமே வைத்துக் கொண்டு தடுமாறும் ஒருசில அரசியல்கட்சிகள் என்பதை நாம் உணர வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை 2000-ஆவது ஆண்டுக்குள் தொடங்கியிருந்தால் ஒருவேளை எம்ஜிஆரை போல் ஒரு புரட்சியை அரசியலில் செய்திருக்க வாய்ப்பு அதிகம். அன்றைக்கு மக்கள், நேர்மையான ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும், அரசியலில் ஊழல் இருக்கக் கூடாது என்ற உணர்வைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் இன்றைக்கு நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது.
வாக்குகளை விலைபேசத் துடிக்கும் சுயநல அரசியல்வாதிகள் ஒருபுறம், நம்முடைய வாக்குகள் இந்தத் தேர்தலில் எவ்வளவுக்கு விலைப்போகும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்தவர்கள் ஒருபுறம் இருக்க, இவர்களுக்கு இடையே நேர்மையான ஜனநாயகம் என கொடி பிடித்துக்கொண்டிருக்கும் பிழைக்கத் தெரியாதவர்கள் சிலர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய அரசியல் நிலைமை.
இத்தகைய சூழலில் நீதி, நேர்மை, நாணயம் என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்த முற்படுபவர்களுக்கு ஆதரவு மிகக் குறைவாக இருக்கும் என்பதுதான் உண்மை. வேண்டுமானால் ரஜினி குறுகிய காலத்தில் கட்சித் தொடங்கி தனித்து நிற்பாரேயானால், அவரது செல்வாக்குமிக்க ரசிகர்கள், நேர்மையான ஆட்சியை விரும்புவோரின் வாக்குகள் என 20 சதவீதம் வாக்குகளே அதிகபட்சம் ரஜினிகாந்துக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான் நிதர்சனம்.
இந்த வாக்கு வங்கி இன்றைய ஆளும் கட்சி அந்தஸ்துக்கு போதாது. பேரம் பேசுவோர் தயவு இருந்தால் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். அத்துடன், இன்றைய நிலையில் ரஜினியின் வயது, உடல்நிலை அவர் தொடர்ந்து மாற்று அரசியலுக்கு தொடர்ந்து நேரடியாக போராடுவதற்கு இடம் கொடுக்காது என்பதே யதார்த்தம்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஹோட்டல் லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, ‘எனக்கு முதல்வர் பதவி வேண்டாம். மக்கள் மத்தியில் எழுச்சி வந்த பிறகு அரசியலுக்கு வருவேன். அந்த அதிசயம் அற்புதம் நிகழும்’ என்று குறிப்பிட்டார். அப்போது மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை அவரது பேச்சு ஏற்படுத்தும் என்றும் அவர் எதிர்பார்த்தார். ஆனால் அத்தகைய தாக்கத்தை, எழுச்சியை மக்கள் பிரதிபலிக்கவில்லை. இதுதான் அவருக்கு அரசியல் கட்சி தொடங்குவதில் ஏற்பட்ட முதல் ஏமாற்றம் என்று சொல்ல வேண்டும்.
தனிக் கட்சி தொடங்கினால், தான் எதிர்பார்க்கும் நேர்மையான அரசியலை, நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியாது என்ற அளவுக்கு ஊழல் புரையோடியுள்ளதை உணர்ந்துதான், “மக்களிடம் எழுச்சி வரட்டும், நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று தெளிவாகக் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், ஒருசிலர் அரசியல் லாபத்துக்காக (அவர்களின் பாணியில் தமிழகத்தின் நலனுக்காக) ரஜினியை அரசியலுக்கு வலுக்காட்டாயமாக இழுக்கத் தொடங்கிய சூழலில், மீண்டும் அவர் ரசிகர்களை சந்தித்தபோது, ரஜினி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்பதாக அவர்கள் கூறியது – தான் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் மதில் மேல் பூனையாக இருந்தார் ரஜினி. ஒருவழியாக ‘டிசம்பர் 3-ஆம் தேதி, ஜனவரியில் கட்சித் தொடக்கம், டிசம்பர் 31-இல் அறிவிப்பு’ என ட்விட்டரில் ரஜினி அறிவித்தார்.
இது அரசியலுக்கு அவரை இழுத்து வேடிக்கை பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த கைத்தேர்ந்த பேச்சாளர்களுக்கும், தன் கருத்தை மக்கள் கருத்தாக எழுதி அரசியல் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டவர்களுக்கும், பேனாவில் பொய்’மை’ நிரப்பி எழுதி வந்த ஒருசில சந்தர்ப்பவாதிகளுக்கும் காதில் இன்பத் தேனாக பாய்ந்தது.
ஆன்மிக சிந்தனையுடைய ரஜினி, கட்சித் தொடங்கும் ஆயத்தப் பணியில் விறுவிறுப்பாக இறங்கி, தான் நடிக்கும் படத்தின் பணிகளையும் விரைந்து முடிக்க ஈடுபட்ட வேளையில், திடீர் சுகவீனத்தை அளித்து, எச்சரிக்கை மணி அடித்து ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். ரஜினியின் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.
‘தேர்தல் அரசியலுக்கு வராமல், மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்’ என்ற வார்த்தைகள் மூலம் அவர் நல்ல முடிவை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
பணம், புகழ், செல்வாக்கு ஆகியவை அவரது திரையுலக வாழ்க்கை மூலமே கிடைத்துவிட்ட நிலையில், அவர் இன்றைய நேர்மையற்ற அரசியல் ஆடுகளத்தில் குதித்து கேடு விளைவித்துக் கொள்வதில் உண்மையான ரசிகனுக்கு விருப்பமிருக்காது. ரசிகன் என்ற போர்வையில் திரிந்த சுயநலவாதிகளுக்குத்தான் ஏமாற்றமாக இருக்கும்.

ரஜினி அரசியலுக்கு வராமலேயே, 1996 தேர்தல் முதல், அவரது தேர்தல் நேர ‘வாய்ஸ்’ வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு இன்றியமையாததாக அமைந்திருந்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ரஜினி வாய்ஸ்’ என்ற அசுர சக்தி இன்றைக்கும், என்றைக்கும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சொல்லப்போனால் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும், நேர்மையான அரசியலில் ஈடுபட்டுள்ள ‘நல்லவர்’களுக்காக அவரது வாய்ஸ் இருக்கும் என்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.
You must log in to post a comment.