காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும்-வானிலை ஆய்வு மையம்
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது செவ்வாய்க்கிழமை புயலாக வலுவடைந்து மேற்கு கடற்கரையையொட்டி வடக்கு திசையில் நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கை:
தென்மேற்கு பருவமழை கேரளா, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய தமிழகப் பகுதிகளிலும் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுவடைந்து மேற்கு கடற்கரையையொட்டி வடக்கு திசையில் நகரும். இதன் காரணமாக தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக, கோவா கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இதன் காரணமாக ஜூன் 4-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
You must log in to post a comment.