அரசு உதவி பெறாத பள்ளிகள் 40% கட்டணம் வசூலிக்க அனுமதி

சென்னை: தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தில் 40 சதவீதத்தை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வசூல் செய்துகொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தமிழக அரசின் கல்விக் கட்டணம் தொடர்பான  அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி  தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர்  தற்போது ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் சூழலில் 25 சதவீதம்,  பள்ளிகள் திறக்கும் போது 25 சதவீதம், பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மீதமுள்ள 25 சதவீத கட்டணம் குறித்து பள்ளிகளுக்கான நிர்ணய குழு முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் நிலையில், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும், முதல் தவணையாக 50 சதவீதம் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வழக்கை பிற்பகலுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பிற்பகலில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,  வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம். 2 மாதங்களுக்கு பிறகு 35 சதவீதம் கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.  மறு உத்தரவு வரும் இந்த உத்தரவு பொருந்தும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.