லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

புதுதில்லி, ஜூலை 3: இந்திய-சீனா எல்லைப் பகுதியான லடாக் பகுதிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு நடத்தினார்.

லடாக் எல்லைப் பகுதியில் சீனத் துருப்புகளுக்கும், இந்திய வீரர்களுக்கும் திடீர் கைகலப்பு ஏற்பட்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சீனத் துருப்புகளில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த பதற்றம் காரணமாக இருநாட்டு நல்லுறவிலும் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இருநாடுகளுமே கல்வான் பள்ளத்தாக்கை மிக முக்கியமானதாக கருதுகின்றன. இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையேதான் இந்த கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளதுதான் இவ்வளவு முக்கியத்துக்குக் காரணம்.

சீனாவின் தற்போதைய ஆத்திரத்துக்குக் காரணம் இந்தியா மேற்கொண்டு வரும் அமைதிதான். ஒருபுறம் இந்திய எல்லையோரச் சாலைகளை வலிமைப்படுத்துதல், மற்றொரு புறம் சீனாவின் சீண்டலை பொருட்படுத்தாமல் இருத்தல் போன்றவற்றால் ஏற்பட்ட ஆத்திரம்தான் அண்மையில் ஏற்பட்ட மோதல் கருதப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியா எல்லைப் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பை அளித்து வருகிறது. இந்திய பாதுகாப்பை கருத்தில்கொண்டு சீன செயலிகள் அனைத்தையும் இந்தியா தடை செய்தது. அத்துடன் நாட்டின் எந்த கட்டமைப்புத் திட்டத்திலும் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தது.

இச்சூழலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதிக்கு திடீரென சென்றுள்ளார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத்தும் சென்றார்.

இந்திய எல்லைப் பகுதியின் பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். அத்துடன் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வீரர்களையும் பிரதமர் சந்தித்து நலம் விசாரித்தார். ராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

லடாக்கின் லே பகுதியில் உள்ள லிமு என்ற இடத்திலும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார் (லிமு கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது).

நெருக்கடியான சூழலில் நாட்டின் பிரதமரே எல்லைப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆய்வு மேற்கொண்ட பிரதமர் விரைவில் நாட்டு மக்களுக்கு இது தொடர்பான தகவல்களை பரிமாற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

உலக நாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவே பிரதமரின் இந்த பயணம் அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.

Spread the love

விளம்பரங்கள்

.

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.