பென்சிலும் நாமும்
வெ நாராயணமூர்த்தி, ஆன்மிக நெறியாளர்

ஒரு வயதான, அனுபவமிக்க, (தேய்ந்துபோன) ஒரு பென்சில் ஒரு புதிய இளம் பென்சிலுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாம். நீதான் அனைத்தையும் எழுதுகிறாய் என்று கர்வப் படாதே. உன்னை எழுத வைப்பது வேறு யாரோ ஒருவர் என்று நீ சீக்கிரமே தெரிந்துகொள்வது நல்லது. ஏனென்றால் உன்னால் தன்னிச்சையாய் எதுவும் செய்ய முடியாது. உன் வெளி ரூபமமான மரத்தால் எழுதமுடியாது. அந்தப் பணியைச் செய்வது உனக்குள் இருக்கும் இன்னொரு கரிப்பொருள். இந்தக் கரிப் பொருளின் தரத்தைப் பொறுத்தே நீ எழுதும் விஷயங்களின் தரம் அமையும். இது அவ்வப்போது மழுங்கக்கூடியது. அதை தேவைப் படும்போது அதை கூர்மை செய்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உன் எழுத்து தெளிவாக இருக்காது.
உனக்கு இன்னொரு வரம் உனக்குப் பின் அமைந்துள்ள அழிப்பான் (ரப்பர்). எந்த நேரமும் நீ செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள இது உதவும். இந்த வசதிகளை வைத்துக்கொண்டு, எந்த நேரமும் எந்த இடத்திலும் நீ எழுதவேண்டியதை எழுதிக்கொண்டு தொடர்ந்து தளர்வின்றி எப்போதும் முன் நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கவேண்டும், உன் வாழ்நாள் முடியும்வரை!

இந்த அறிவுரைகள் எவ்வளவு தீர்க்கமானது பாருங்கள். பென்சிலுக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருக்கிறது. நம் வாழ்க்கை நம் கையில். அனைத்தையும் முடிவு செய்பவன் நானே என்று இருமாப்பில் சதா திளைக்கிறோம். உண்மையில் நம்மை இயக்குவது வேறு யாரோ. வெளித் தோற்றம் முக்யம் அல்ல. செல்வம், கல்வி, அந்தஸ்த்து இவை முக்யமில்லை. உள்ளே இருக்கும் கருபொருள் முக்யம்.
கரிபொருள் போல மனம் கூர்மையாக இருக்கும்போது நம்மை தெளிவாக வழிநடத்துகிறது. மழுங்கிப் போகும்போது தடுமாறச் செய்கிறது. நம்மில் பெரும்பாலோர் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ள அழிப்பானை பயன்படுத்துவதே இல்லை. அதனால் திசை தடுமாறுகிறது. பாதையில் மேடு பள்ளங்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. அது கூர்மையை மேலும் மழுங்கச் செய்கிறது.
இதையெல்லாம் தாண்டி பென்சில் சொன்ன முதல் அறிவுரையை நாம் கண்டுகொள்வதேயில்லை. அது நம்மை இயக்குவது நம்மைப் படைத்தவன். நாமே அல்ல. நம் மனம் அல்ல. இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டு, நம்மை அவ்வப்போது கூர்மையாக்கிக் கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொண்டு, மேடுபள்ளங்களைக் கண்டு அசராமல், இயக்குபவனை நினைத்து முன் நோக்கிப் பயணிக்கும் எவரும் அமைதியான, ஆனந்தமான வாழ்க்கையை அனுபவிக்கமுடியும்.

மஹாபாரத புராணத்தில் ஒரு கதை. யுத்தம் முடிந்ததும், யார் அதிகமாக வதம் செய்தவர்கள் என்று பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரு சரச்சை வந்ததாம். கண்ணனை அழைத்துக்கொண்டு யுத்த களத்தை ஆய்வு செய்தார்களாம். அப்போது கர்ணன் சிதைத்த கடோத்கஜனின் உடல் தனியாகவும் தலை ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்ததாம். இந்தத் தலை முழு யுத்ததையும் கவனித்துவந்தது. அதைக் கேளுங்கள், உண்மை தெரியும் என்றான், கண்ணன். தலை சொல்லியது: யாரும் யாரையும் கொல்லவில்லை. நான் பார்த்ததெல்லாம் கண்ணனின் சக்ரம் மட்டுமே சுழன்று அனைவரையும் கொன்றதை மட்டுமே!

நான்தான் செய்தேன், என்னால் மட்டுமே இது செய்யமுடியும் என்று இறுமாப்பு கொள்ளும் அனைவருக்கும் பென்சிலின் அறிவுரைகளை தெரிந்து கொள்ளவேண்டும். பென்சிலைப் போல நம் உண்மையான இயல்பைப் புரிந்துகொண்டு, நம் உடல் மனம் இவைகளைத் தாண்டி நமக்குள் மறைந்திருக்கும் தெய்வீகம்தான் நம்மை இயக்குகிறது என்பதை புரிந்துகொள்வதுதான் ஒன்றே நம் வாழ்க்கையை செம்மைபடுத்தும்.
முன் பிறவியில் செய்த கர்ம வினைகளின் பலன்களைத் தீர்த்துக்கொள்ளவே இந்தப் பிறவி நமக்கு பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. கூர்மையாக்கிக்கொள்ள குருமார்களின் உதவியோடு, தெளிவோடு வாழ்க்கையை அணுகும்போது, நம் வாழ்க்கை பயனுள்ள வகையில் அமையும். பென்சிலின் வாழ்க்கை பிறருக்கு பயன்படவே. பென்சில் மேற்கொள்ளும் அனைத்து சுக துக்கங்களும் பிறருக்கு விஷயங்களை தெளிவு படுத்தவே. நம் வாழ்க்கையும் நமக்கும் பிறருக்கும் பயன்படுவதே. நாமும் தெளிவடைந்து பிறரையும் தெளிவுபடுத்தி வாழ்க்கையை பயமின்றி, ‘லோக க்ஷேம சுகினோ பவந்து’ என்று பயனுள்ளதாக்குவதே நம் பிறப்பின் ரகசியம்.
You must log in to post a comment.