நிவர் புயல் அதிகாலையில் கரையைக் கடந்துவிடும்
பிற்பகல் வரை அதன் தாக்கம் இருக்க வாய்ப்பு
சென்னை: அதிதீவிர புயலாக கரையைக் கடக்கவுள்ள நிவர் புயல் நள்ளிரவு தொடங்கி அதிகாலைக்குள் கடந்துவிடும். அதன் மையப் பகுதி அதிகாலை 3 மணியளவில் கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் தற்போது புதுச்சேரிக்கு 55 கி.மீ. தொலைவிலும், கடலூரில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது . இதன் நகர்வு வேகம் 14 கி.மீட்டரில் இருந்து 16 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. புயல் கரையை 130 முதல் 140 கி.மீட்டர் வேகத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயலின் மையப் பகுதி அதிக மழைக்கான அடர்த்தியான சுழல் மேகங்களைக் கொண்டதாக இருப்பதாகவும், மையப் பகுதி சுமார் 100 முதல் 120 கி.மீட்டர் பரப்பிலும், புயலின் மொத்தப் பரப்பு சுமார் 600 கி.மீட்டர் பரப்பிலும் அமைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இரவு 10 மணியளவில் புதுச்சேரிக்கு 30 கி.மீட்டர் தொலைவில் புயலின் நகர்வு அமைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. சென்னையிலும் மழையும், லேசான காற்றும் வீசத் தொடங்கியது.
புயல் கரையைக் கடந்தாலும் அதன் தாக்கம் வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கும். அத்துடன் தொடர் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
You must log in to post a comment.