வேளாண் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி உடனடியாக விடுவிக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்


புதுதில்லி: வேளாண் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி உடனடியாக விடுவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக 3-ஆவது கட்ட அறிவிப்புகளை அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறியது:
நமது விவசாயிகள் அனைத்து வகையான சவாலான நேரங்களிலும் பணியாற்றியுள்ளனர். பால் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உள்ளது. கரும்பு உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழில்களிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

விவசாயம் மற்றும் அதைச் சேர்ந்த தொழில்களுக்கு 8 திட்டங்கள், நிர்வாக கட்டமைப்புகளுக்கு 3 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

10 ஆயிரம் கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம்


ரூ.10 ஆயிரம் கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும். இதன் மூலம் உள்ளூர் உணவுப் பொருள்கள் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும். சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச தரத்தில் செயல்பட உதவி செய்யப்படும். இத்திட்டத்தில் சுமார் 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலன் அடையும்.

உள்ளூர் உணவுப் பொருள்கள் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும். மகளிர் சுயஉதவிக்குழுக்கள், வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களும் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் பலன் அடைவர்.
நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் தமிழகத்தின் மரவள்ளிக் கிழங்கு, காஷ்மீர் குங்குமப்பூ. ஆந்திராவின் மிளகாய் போன்றவை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்.

மீனவர்களுக்காக…


பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கடல் மீன் பிடிப்பு, உள்ளூர் நீர் நிலைகளில் மீன்பிடிப்பு மற்றும் மீன் பண்ணைகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீன்பிடித் துறைமுகங்கள், மீன்களை பதப்படுத்தி வைக்கும் அமைப்புகள் மற்றும் சந்தைகளை மேம்படுத்த ரூ.9 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

இத்திட்டத்தில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இரட்டிப்பாகி ரூ.1 லட்சம் கோடியாக உயரும்.
மார்ச் மாதத்துடன் அங்கீகாரம் இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.


கால்நடைகளுக்கு…


தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் ரூ.13,343 கோடியில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மூலம் 100 சதவீதம் கால்நடைகளுக்கு – அதாவது 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பால்வளத் துறையில் தனியார் முதலீடுகள்

பால்வளத் துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்.
பாலை மூலப்பொருளாகக் கொண்ட மதிப்பு கூட்டு பொருள்கள் தொழில்களில் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்படும்.

மூலிகை வளர்க்க…


மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 10 லட்சம் ஹெக்டேரில் அடுத்த 2 ஆண்டுகளில் மூலிகைத் தாவரங்கள் பயிரிடப்படும்.
மூலிகைத் தாவரங்கள் பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். மூலிகை தாவரங்களுக்கு பிராந்திய அளவிலான மண்டிகள் அமைக்கப்படும்.
கங்கை நதிக்கரை ஓரத்தில் 800 ஹெக்டேர் பரப்பில் தேசிய மூலிகை பண்ணை வாரியத்தின் மூலம் மூலிகைகள் வளர்க்கப்படும்.


தேனீ வளர்ப்புக்கு உதவி…


தேனீ வளர்ப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும். தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலுக்கு தேவையான கட்டமைப்புகளை அரசு உருவாக்கும். நாடு முழுவதும் 2 லட்சம் தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் பெருகும்.


விவசாயிகளுக்கு மானியம்…


தக்காளி, வெங்காயம், உருளை விவசாயிகளுக்கான வசதிகள் அனைத்து காய்கறி, பழங்களை பயிரிடும் விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அபரிமித வளர்ச்சி உள்ள இடங்களில் இருந்து பற்றாக்குறை இடங்களுக்கு விவசாயப் பொருள்களை அனுப்பி வைத்தால் 50 சதவீதம் போக்குவரத்து மானியம் வழங்கப்படும்.

குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருள்களை சேகரிக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். எளிதில் அழியும் காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு சலுகைகள் நீட்டிக்கப்படும்.

சட்டத்தில் திருத்தம்…


விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளை ஆகிய வேளாண் பொருள்களை விவசாயிகள் அதிக இருப்பு வைக்க வழிவகை செய்யப்படும். விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருள்களை சரியான விலையில் விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

ஆன்-லைன் விற்பனைக்கு கட்டமைப்பு


விவசாயப் பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். விவசாயப் பொருள்களை மாநிலங்களுக்கு இடையே தடையின்றி கொண்டு செல்ல சட்டம் இயற்றப்படும். விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும்.
விவசாயிகளிடம் இருந்து பொருள்களை வியாபாரிகள், நிறுவனங்கள் கொள்முதல் செய்வதில், விலை நிர்ணயம் செய்வதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.