புதிய நாடாளுமன்ற கட்டடம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை

பிரதமர் திட்ட அடிக்கல்லை நாட்டலாம் – ஆனால் கட்டுமானத்தைத் தொடங்க முடியாது

புதுதில்லி:இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம், அதையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான – சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட் – அடிக்கல் நாட்டப்படும் நிலையில், திட்ட அடிக்கல்லை நாட்டலாம், ஆனால் கட்டுமானத்தை தொடங்க கூடாது என நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று அறிவித்தது.

வரும் டிசம்பர் 10-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது அடிக்கல் நிகழ்ச்சிக்கு தடை இல்லையென்றாலும், கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியாது.

புதுதில்லி லுட்யன்ஸ் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா புராஜக்ட்-இல் பல விதிமீறல்கள் இருப்பதாகவும், அதனால் அதை நிறுத்தவும் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது வழக்கு விசாரணை நிறைவடையும் வரை புதிதாக கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் மரங்களை வெட்டக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமைந்திருக்கும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சில நாள்களுக்கு முன் தெரிவித்தார்.

64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த கட்டடத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தைவிட 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரிதாகும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.