புதிய மின்திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்-பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்ல, நாடு இன்று சிறந்து விளங்குவதற்கு அவர்கள் இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்களின் உரிமைகள் பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகே நிலைநாட்டப்பட்டன. அத்தகைய போராட்டங்களில் மிகவும் முக்கியமானது தமிழகத்தில் மின்கட்டணக் குறைப்பு, இலவச மின்சாரம் ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமியின் தலைமையில் கோவையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, 1989-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக திமுகவின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் ‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என்று வாக்குறுதியை கருணாநிதி அளித்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து, மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி நாட்டிலேயே முதன்முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். அத்திட்டம் 1990 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டமே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையைப் போக்கியதுடன் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது. இத்தகைய திட்டத்தை முடக்கும் வகையில், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் விதத்திலும், மின்சாரத் திருத்தச் சட்டம் 2020 உள்ளது.


நமது அரசியல் சட்டத்தில் மின்சாரம் பொதுப்பட்டியலில் உள்ளது. மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-இன் மூலம் மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படும் வகையில் உள்ளன.
எனவே மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பறிக்கும் புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, தில்லி ஆகிய மாநில முதல்வர்களுக்கும் பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கைகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியுள்ளார் ஸ்டாலின்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.