மதுரையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: எம்.பி. கோரிக்கை

மதுரை: மதுரையில் நாள்தோறும் குறைந்தபட்சம் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரைக்கு வந்திருந்த மாநில சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்ததாக எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நாள் ஒன்றுக்கு இப்பொழுது 1, 500 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. இந்த பரிசோதனை எண்ணிக்கையை மூவாயிரமாக உயர்த்த வேண்டும்.

மதுரை அரசு மருத்துவமனையில் 1,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக சொல்லப்பட்டு வந்தாலும், அவற்றில் சரிபாதி மட்டுமே தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதில் சுகாதாரத் துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து படுக்கை வசதியை அதிகரிக்க வேண்டும்.

இப்பொழுது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் 32 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றை நாள்தோறும் 50 என்ற எண்ணிக்கையில் அதிகப்படுத்த வேண்டும். அதே போல புறநகர் பகுதியிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

மதுரையில் தொற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளது, இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்நிலையில் கரோனோவுக்கு எதிரான போராட்டத்தில் மாவட்ட, மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தையும், அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. அந்தவகையில் மாநில அரசை நாங்கள் தொடர்ந்து வழியுறுத்தியதால் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார், அதே போல இரு தினங்களுக்கு முன்பு மாநகராட்சி சுகாதார அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பொழுது மதுரையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ துறை சார்ந்த அதிகாரியை சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சி நடப்பதாக கேள்விப்பட்டோம். நெருக்கடியான நேரத்தில் மாநில அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.