அட்ரா சக்க… அட்ரா சக்க… அடையாளம் மாறும் முகக் கவசங்கள்!


சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இன்றைக்கு முகக் கவசம் அவசியமாகியுள்ளது.


முன்பெல்லாம் முகக் கவசங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும் அறுவை சிகிச்சை அரங்குகளில் மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்தது. மெல்ல சில சிறப்பு சிகிச்சை வார்டுகளிலும், அவசர சிகிச்சை பிரிவுகளிலும் வெளிநபர்கள் சென்று நோயாளிகளை பார்க்கும்போது அதை பயன்படுத்தும் நிலை மட்டுமே இருந்தது.


இப்போது நிலைமை மாறிவிட்டது. கொரோனா நோய்த் தொற்று இன்றைக்கு எல்லோரையும் முகக் கவசம் அணிய வைத்துவிட்டது.
மார்ச் மாதம் வரை முகக் கவசங்கள் தட்டுப்பாடு இருந்து வந்தது. பின்னர் இதன் உற்பத்தியில் பலரும் கவனம் செலுத்தவே சாலையோரங்களில் கூட இன்றைக்கு முகக் கவச விற்பனை வெகுஜோராக நடைபெறும் அளவுக்கு உற்பத்தி பெருகியுள்ளது.

இந்நிலையில் முகக் கவசங்களில் பல்வேறு புதுமைகளை ஏற்படுத்தி, பின்னலாடைகள் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. அதையடுத்து ஆண்களும், பெண்களும் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற வண்ணங்களில் முகக் கவசங்கள் மற்றும் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்ட முகக் கவசங்கள் தயாரிப்பில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் என நடிகர்களின் படம் போட்ட முகக்கவசங்களை தயாரிக்கும் பணி தொடங்கி விற்பனை சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.

இன்னும் ஒரு சில வாரங்களில் கடவுளர்கள், மாமனிதர்கள், இயற்கைக் காட்சிகள், பிரபல விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரின் உருவம் தாங்கிய முகக் கவசங்கள் வரும் என்பதில் சந்தேகமில்லை.

எது எப்படியோ, தங்களை கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள இன்றைய இளைஞர்கள் முகக் கவசம் அணிந்தால் சரி..அதற்காக இத்தகைய கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெறுவதில் ஒன்றும் தவறில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இருப்பினும் சர்ச்சைக்குரிய உருவங்களை பதித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதிலும் இத்தகைய முகக் கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கவனம் செலுத்தியாக வேண்டும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.