எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை: கொரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (62) புதன்கிழமை காலமானார். இது திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலராகவும். சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமாக ஜெ. அன்பழகன் இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வென்டிலேட்டர் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது சிறுநீரகத்தின் செயல்பாடு குன்றியதாகவும், அத்துடன் இதய செயல்பாடும் மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அன்பழகனின் மறைவுச் செய்தியை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மருத்துவனைக்கு வந்தனர்.

அன்பழகனுக்கு புதன்கிழமை 62-ஆவது பிறந்த நாள். இந்நிலையில் அதே நாளில் அவர் மறைந்துள்ளார்.

அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் வைகோ, தொல். திருமாவளவன், அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் திமுக முன்னோடிகளில் எல்லோருக்கும் மிகவும் பரிட்சயமானவர் அன்பழகன். தியாகராயர் பழக்கடை ஜெயராமன் திமுக தலைவர் மு.கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தவர். அவரது மகன்தான் ஜெ. அன்பழகன். அன்பழனுக்கு எம்எல்ஏ தேர்தலில் சீட் ஒதுக்கப்பட்டபோது அந்த வாய்ப்பை பயன்படுத்தி 3 முறை எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார். சென்னையில் திமுக வெற்றி பெறுவதற்கு அதிகம் உழைத்தவர்களில் அன்பழகனுக்கும் தனி இடம் உண்டு. கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகம் உச்சரித்த பெயர்களில் அன்பழகனும் ஒருவர். அன்பழகன் திரைப்படத் துறையில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்து வந்தார்

அன்பழகன் மறைவையடுத்து தமிழகம் முழுவதும் 3 நாள்களுக்கு கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், 3 நாள்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறும் கட்சியினரை திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.