ஸ்டாலின் அறிக்கைகளில் மக்கள் நலன் சார்ந்தவை இல்லை: அமைச்சர் காட்டம்

மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை கொரோனா தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை விடுத்துள்ளார். அதில் ஒன்றுகூட  மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அறிக்கை இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

அம்மா சேரிடபில்  டிரஸ்ட் சார்பில் அம்மா கிச்சன் மூலம் மதுரையில்  கொரோனா  சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் 3 வேளை உணவும், 2 வேளை பாசிப்பருப்பு சுண்டல் மற்றும் இஞ்சி டீ வழங்கப்படவுள்ளது. இந்த உணவு தயாரிக்கும் அம்மா கிச்சன் கூடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியது:

அம்மா கிச்சனில் தயார் செய்யும் உணவுகள் ஆரோக்கியமான முறையில் தயார் செய்யப்படுகின்றன.  இங்கே தயாரிக்கும் உணவில் இஞ்சி, மிளகு ,சுக்கு, வெங்காயம், பூண்டு என நோய் எதிர்ப்பு சக்திமிக்க உணவு மூலம்  புரதச்சத்து நிறைந்த வகையில்  தயாரிக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா குறித்து  நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை விட்டுள்ளார். அவற்றில் ஒன்று கூட மக்கள் நலன் சார்ந்தவை இல்லை. நோய் உள்ளவர்களுக்கு நம்பிக்கைதான் மருந்து.  ஆனால் அவர் ஒரு இடத்தில் கூட மக்களுக்கு  நம்பிக்கையூட்டவில்லை.

எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் அரசு அதிகாரிகளையும் குறை கூறுகிறார்.  மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிதான். அதேபோல் அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.  கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்.  ஆனால் ஸ்டாலின் பொறாமை காய்ச்சலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ் எஸ் சரவணன்,  அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட இலக்கிய அணி  செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.