மேட்டூர் அணையை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதலவர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியது: மேட்டூர் அணையில் இருந்து 90 நாள்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. உபரிநீர் மூலம் 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது. பாசனப் பரப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,433 கோடி குடிமராமத்து பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம்.அதற்கு தமிழக அரசு உதவிதான் செய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்றார் முதல்வர்.
You must log in to post a comment.