மூன்று சரீரங்கள், மூன்று அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி

ஆன்மிக நெறியாளர்

உங்களுக்கு எத்தனை உடல் இருக்கிறது? என்று ஒரு நண்பரைக் கேட்டேன். ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று ஆச்சர்யத்துடன் பார்த்து, ‘ஒன்றுதான்’ என்றார் உறுதியாக. ‘அய்யா ஒன்றல்ல மூன்று’ என்றதும் நண்பர் ஆடிப்போய் விட்டார். ‘கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்’ என்று கெஞ்சத் தொடங்கிவிட்டார்.

ஸ்தூல சரீரத்தின் இயல்பானப் பண்பே அது அழியும் வரை மாற்றங்களைச் சந்திப்பதே. இந்தச் சரீரம் அதன் வாழ்நாளில் ஆறு வகையான தொடர் மாற்றங்களைச் சந்திக்கிறது. அவை கருவில் இருக்கும் நிலை (அஸ்தி), பிறத்தல் (ஜாயதே), வளர்தல் (வர்ததே), பருவமடைதல் (விபரீணமதே), வயது முதிர்வு (அபக்க்ஷேயதே), இறப்பு (விநாஷ்யதி). இந்த உலகத்தோடு தொடர்பு கொள்ள, அனுபவங்கள் பெற இந்த சரீரத்தில் ஐந்து புலன்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, சருமம்) உள்ளன. இது நான்கு பாகங்கள் (தலை, கழுத்திலிருந்து இடுப்பு வரை உள்ள முண்டம்), கைகள், கால்கள் கொண்டது. வெளியே தெரியும் இந்த சரீரத்தை பார்க்கமுடியும், உணரமுடியும், பிறராலேயும் பார்க்கமுடியும்.

ஸ்தூல சரீரத்தை அனுபவிப்பவர் தற்காலிகமாக வாழும் வீடு இதுவே. எந்த நேரத்திலும் வீட்டை காலி செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் எந்த முன் எச்சரிக்கை இல்லாமலேயும் கூட.  இந்தச் சரீரம் உணவால் பராமரிக்கப்படுகிறது. பிராண சக்திகள் இது இயங்குவதற்கான ஆற்றலைத் தருகின்றன. இந்த சரீரத்தின் முக்கிய காரணமே, அது வாழும் வரை, அதை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்வதே. அதனுடைய இயக்கங்களுக்கு மரியாதை தந்து பராமரிக்கவேண்டும். ஆனால் அதனுடனேயே ஒன்றிப் போகக் கூடாது என்பதே வேதங்கள் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை. இயற்கையால் உருவானதால், இயற்கையின் மாற்றங்கள் அனைத்தும் சரீரங்களையும் பாதிக்கின்றன.

நாம் பார்க்க முடியாத, ஆனால் உணரக்கூடிய இன்னொரு சரீரமும் நம்முடனேயே மறைந்து இருக்கிறது. இதை சூட்சும சரீரம் அல்லது லிங்க சரீரம் என்று நம் முன்னோர்கள் அடையாளம் கண்டனர். இதுவும் பஞ்சபூதங்களால் ஆனது, ஆனால் ஸ்தூல சரீரத்தைப் போல வளர்வதுமில்லை, மடிவதுமில்லை. இதுவும் முன்பிறவியில் செய்த நல்ல கர்மங்களின் பயனாக கிடைத்தது. ஸ்தூல சரீரத்தின் புலன்கள் வழியாக கிடைக்கும் அனைத்து தகவல்களும் இங்கேதான் அனுபவங்களாகப் பகுத்தறியப்படுகின்றன. இந்த சரீரத்தில் பத்து இந்த்ரீயங்கள் (எந்த்ரங்கள்) உள்ளன. அவை ஐந்து ஞானேந்த்ரீயங்கள், ஐந்து கர்மேந்த்ரீயங்கள். இவைகளைத் தவிர, ஐந்து தன்மாத்ரங்கள் உள்ளன. ஸ்தூல சரீரத்தின் புலன்களிலிருந்து கிடைக்கும் அனுபவங்களான பார்த்தல், ருசித்தல், கேட்பது, வாசனை, தொடு உணர்வு போன்றவைகளை நிர்வகிப்பது ஞானேந்த்ரீயங்கள். ஞானேந்த்ரீயங்களுக்கு பக்க பலமாக பின்னின்று இயக்குபவை ஐந்து கர்மேந்த்ரீயங்கள். ஸ்தூல சரீரத்தின் செயல்பாடுகளான பேசுவது, கைகளை இயக்கி பொருள்களைப் பிடிப்பது, நடப்பது, கழிவுகளை வெளியேற்றுதல், இனப்பெருக்கம் செய்தல் ஆகிய இயக்கங்களை நிர்வாகம் செய்கின்றன.

இந்த இரண்டு வகையான இந்த்ரீயங்களின் பணிகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். பார்த்தல், ருசித்தல், கேட்டல், தொடு உணர்வு போன்ற அனுபவங்களை ஸ்தூல சரீரம் உள்வாங்கிக்கொள்கிறது. இந்த அனுபவங்களை அவைகளால்  திருப்பி வெளியே அனுப்பமுடியாது. இந்த அனுபவங்களுக்கு பதிலாக பேச்சு ஒன்றைத்தான் ஸ்தூல சரீரம் உலகிற்கு வெளியனுப்புகிறது. இது ஒரு இயக்க செயல்பாடு.

அதைப் போலவே கை கால்களைப் பயன்படுத்திக் காரியங்களைச் செய்தல், கழிவுகளை வெளியேற்றுதல், இனப்பெருக்கம் செய்தல் போன்ற வெளி செயல்பாடுகளை ஸ்தூல சரீரத்தின் வழியாக நிறைவேற்றுகின்றன. ஞானேந்த்ரீயங்கள் ஸ்தூல சரீரத்துக்கு அனுபவங்களை உள்ளே அனுப்பும் நுழைவாயில்கள். கர்மேந்த்ரியங்கள் ஸ்தூல சரீரத்தின் செயல்பாடுகளை வெளிக்கொணரும் வெளிவாயில்கள்.

இந்த்ரியங்களின் ஒரு குழு உலக அனுபவங்களை உள் அனுப்புகிறது, இன்னொரு குழு அதற்கான பதில் செயல்பாடுகளைத் திருப்பித் தருகிறது. என்ன ஆச்சர்யம் பாருங்கள்!

அடுத்தது ஐந்து தன்மாத்ரங்கள். இவைகளை அதிசூட்சும சக்திகள் அல்லது இயக்கிகள் என்று சாஸ்த்ரங்கள் அடையாளம் காட்டுகின்றன. ஒரு வாகனத்துக்கு சக்கரங்கள் மற்றும் ஏனைய கருவிகள் இருந்தால் மட்டும் போதாது. இயக்க சக்தியும் ஆற்றலும் வேண்டுமல்லவா? அதற்காக சூட்சும சரீரத்தில் ஐந்து இயக்க சக்திகளாக ப்ராண, அபான, ஸமான, உதான, வியான ஆகிய சூட்சும இயக்கிகள்  சரீரங்களுக்குத் தேவையான சக்தியையும் ஆற்றலையும் தருகின்றன. ப்ராண (மூச்சு- தலை, இதயப் பகுதியை நிர்வகிக்க), அபான (இடுப்புப் பகுதி- கழிவுகளை வெளியேற்றுதல்), ஸமான (தொப்புள் பகுதி-ஜீரணம்), உதான (கழுத்துப்பகுதி- வளர்ச்சி,பேச்சு, பாவனைகளை வெளிப்படுத்துதல், இதைத் தவிர சில மேல்நோக்கிக் கிளம்பும் கழிவுகளான வாந்தி, தும்மல் ஆகியவைகளை வெளியேற்றுதல், இறப்பு நேரத்தில் சூட்சும சரீரம் இதன் சக்தியைப் பயன்படுத்தியே வெளியேறுகிறது) வியான( ரத்தம், உணவுச் சத்து,ஆற்றல் ஆகியவைகளை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பது) ஆகிய ஐந்து வகையான இயக்கங்களை நிர்வகிக்கின்றன.

இந்த ஐந்து தன்மாத்ரங்களும் ஸ்தூல சரீரத்துக்கு மட்டுமல்லாது, பத்து இந்த்ரீயங்களுக்கும் பலவகைகளில் உதவுபவை. இந்தப் இந்த்ரீயங்களோடு மனஸ், புத்தி ஆகியவை சேர்த்து மொத்தம் 17 அம்ஸங்களும் சேர்ந்தததுதான் சூட்சும சரீரம். இந்தச் சரீரம் இல்லாவிட்டால் ஸ்தூல சரீரம் தன்னிச்சையாக இயங்கமுடியாது. ஸ்தூல சரீரம் உருவாகக் காரணமாக இருந்த பஞ்ச பூதங்களே அதிசூட்சும வடிவில் சூட்சும சரீரத்த்தை உருவாக்குகின்றன. இயக்குகின்றன. இரண்டு சரீரங்களும் ஒரே விதமான ஆதி பொருள்களால் உருவானவை. ஆனால் வெவ்வேறு கலவையில், வெவ்வேறு அளவில், வெவ்வேறு காரணகளுக்காக உருவாக்கப்பட்டவை. ஸ்தூல சரீரம் அழிந்தாலும் சூட்சும சரீரம் அழியாமல், தொடர்ந்து இன்னொரு உடலில் வாழத் தொடங்குகிறது.

சூட்சும சரீரத்தில் உள்ள மனதை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மனஸ், நினவுகள் கொண்ட ‘சித்த’, மற்றும் சரீரங்களுக்கு எஜமான எண்ணத்தை உருவாக்கும் ‘அஹங்காரம்’ என மூன்று பகுதிகளாகப் பிரித்து, அதனுடன் புத்தியையும் சேர்த்து மொத்தம் 19 பொருள்கள் அடங்கியது சூட்சும சரீரம் ஸ்ரீ சங்கரர் என்று இன்னொரு விளக்கம் தந்தார்.

 ‘ஸ்தூல சூட்சும சரீர வியோக மரணம்’ என்று இறப்பை வேத சாஸ்திரங்கள் வெகு அழகாக விளக்குகிறது. அதாவது, ஸ்தூல சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் விலகிச் செல்வதே மரணம். ‘ஸ்தூல சூட்சும சரீர சம்யோக புனர்ஜன்மம்’. அதாவது சூட்சும சரீரம் இன்னொரு உடலோடு சேர்வதையே பிறப்பு என்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்தூல சரீரம் செய்யும் அனைத்து செயல்பாடுகளின் விளைவுகள், நல்ல விஷயங்களை புண்யமாகவும், தீய செயல்களை பாவமாவும் சூட்சுமசரீரத்தில் சதா பதிவாகிறது. இன்னொரு உடலோடு ஐக்கியம் ஆகும்போது இந்த பாவ புண்யங்கள் பதிவுகள் புதிய உடலை கட்டுப்படுத்துகிறது.

இந்த இரண்டு சரீரங்களோடு இன்னொரு சரீரமும் மறைந்துள்ளது. இது காரண சரீரம். இதையும் பார்க்கவோ, உணராவோ முடியாது. மற்ற இரண்டு சரீரங்களைப் போலவே இந்த சரீரமும் அதே பொருள்களால் உருவாக்கபட்டது. ஆனால் இவைகளை விட இன்னும் வீரியமான அதிசூட்சும வடிவில், அளவில், செயல்பாடுகளில். இதை ஸ்ரீ சங்கரர் ‘அவித்யா’ என்று வருணிக்கிறார். சாதாரணமாக அவித்யா என்பது அறியாமை. ஆனால் இங்கே வேதங்கள் சொல்லும் இன்னொரு உண்மையைச் சொல்கிறார் ஸ்ரீ சங்கரர். அவித்யா என்பது ‘உண்மை வெளிவராத நிலை’ என்று இங்கே அர்த்தம். என்ன உண்மை? சூட்சும சரீரமும், ஸ்தூல சரீரமும் இணைவதற்குத் தேவையான அடிப்படை உண்மைகளை (ஒரு வீடு கட்ட தேவைப்படும் வரைபடம் போல) தகவல்களை இந்தக் காரண சரீரம் விதையாகத் தாங்கியுள்ளது.

உதாரணமாக, ஒரு மரம் உருவாவதற்கான அத்துணை அடிப்படைத் தகவல்களையும், உயிர் சக்திகளையும் அதன் விதை தாங்கியுள்ளது. அது கருவாகி உயிர்ப்பிக்கும்போதே மரம் உருவாகிறது. மரம் மீண்டும் விதையை உருவாக்குகிறது. அதுபோல சரீரங்கள் உருவாகத் தேவையான அனைத்து அடிப்படைத் தகவகளையும் இந்த காரணம் சரீரம் தாங்கியுள்ளது. சரீரங்கள் உருவானபின் மீண்டும் விதையாக சூட்சும சரீரத்தோடு இயங்குகிறது. இந்த சரீரம் இல்லாவிட்டால் மற்ற இரண்டு சரீரங்களும் உருவாக முடியாது. ஆகவே சரீரங்களுக்கு அடிப்படைக் காரணமாக, அஸ்திவாரமாக இருப்பதால் இது காரண சரீரம்.

இந்த மூன்று சரீரங்களையும் தனித்தனியே பிரிக்க முடியாது. அவைகளின் செயல்பாடுகளைத் தனித்தனியாகவும் உணர முடியாது. அவை தனித்தனியாகவோ தன்னிச்சையாகவோ இயங்கமுடியாது. கூட்டாக மட்டுமே இயங்கமுடியும்.

இந்தச் சரீரங்கள் வழியாக தினமும் மூன்று நிலைகளில் நமக்கு அனுபவங்கள் தொடர்ந்து கிடைக்கின்றன. இங்கேதான் பல ரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. முதல் நிலை நாம் விழித்திருக்கும் நிலை. அடுத்தது உறக்கநிலை. கடைசியில் ஆழ்ந்த உறக்க நிலை. விழித்திருக்கும் போது நம் புலன்கள் வழியாக இந்த உலகோடு தொடர்பு கொள்கிறோம். இரண்டு நிகழ்வுகள் அப்போது நடைபெறுகிறது. நமக்கு இந்த உலக அனுபவம் கிடைக்கிறது. இரண்டாவது, அனைத்து அனுபவங்களையும் (ரூபங்கள், சப்தங்கள், ருசிகள், வாசனைகள், தொடு உணர்வுகள்) மனம் விடாமல்  பதிவுசெய்துக் கொள்கிறது. நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில், தொடர்ந்து பிறந்தது முதல் இறக்கும் வரை பதிவு தொடர்கிறது. அடுத்து வரும் பிறப்புகளுக்கும் தொடர்கிறது. எங்கே சேர்த்துவைத்துக் கொள்கிறது? இது தேவ ரகசியம். சில பதிவுகள் மறக்காத நினைவுகளாகின்றன.

நாம் தூங்கும்போது, உரக்க நிலையில் இன்னொரு உலகத்துக்கு செல்கிறோம். இது மனம்  ஸ்ருஷ்டி செய்யும் அதிசய கனவு உலகம். அப்போது வெளி புலன்களின் செயல்பாடு இல்லை. அடங்கிவிடுகின்றன. வெளி உலகம் மறைந்துவிடுகிறது. ஸ்தூல சரீரம் பற்றிய உணர்வுகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. ஸ்தூல சரீரம் இருப்பதை மற்றவர்கள் காணமுடியும். இந்த நிலையில் மனம் மட்டுமே தொடர்ந்து செயல்படுகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நினைவுகளின் அடிப்படையில் (சில நேரங்களில் சென்ற பிறவிகளின் அனுபவங்களும் சேர்த்து) மனத்திரையில் செயற்கையாகப் பிரதிபலிக்கும் அந்த உள் உலகத்தில், விழித்திருக்கும் நிலையில் உணர்ந்தது போலவே அனைத்தையும் உணரமுடிகிறது. இந்த உணர்வுகள் அனைத்தும் விழித்தவுடன் மறைந்துபோகின்றன. பெரும்பாலான நேரங்களில் விழித்திருக்கும் நிலையிலேயும் நாம் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறோம். இதுவும் மனம் ஸ்ருஷ்டிக்கும் ஒருவகையான கனவுலகம்தான். இதுவும் நிலையானது அல்ல.

உறக்க நிலையில் கனவுகள் மறைந்தவுடன் சில நேரங்களில் ஆழ்ந்த உறக்க நிலைக்கும் செல்ல முடிகிறது. அங்கே வெளிப் புலன்களும், உள்புலன்களும் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்கின்றன. மனம் அடங்கிவிடுவதால் எந்த நினைவும் பிரதிபலிக்கப்படுவதில்லை. சுவாசித்தல், ரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற சில அத்தியாவஸ்ய தேவைகள் மட்டும் ஸ்தூல சரீரத்தில் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் இரண்டு சரீரங்களும் முழுதும் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து விழித்தெழும்போது இரண்டு சரீரங்களும் மிகவும் புத்துணர்வுடன் அடுத்த நாளின் செயல்பாடுகளைக் கவனிக்க முடிகிறது.

ஆழ்ந்த உறக்க நிலையில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. இங்கேதான் காரண சரீரம் தன் பணியை செய்கிறது. இந்த நிலையில் அத்துணை இந்த்ரீயங்களும் செயல்பாடுகளும், எண்ணங்களும், நினைவுகளும், அஹங்காரம் அனைத்தும் இந்த சரீரத்ததுள் விதையாக தற்காலிகமாகக் கரைந்து விடுகின்றன. அப்போது மற்ற இரண்டு சரீரங்கள் இருந்தாலும் உணர இயலாத ஒரு நிலை. ஆனால் விழித்தெழும்போது, அனைத்தும், விதையிலிருந்து முளைத்து மீண்டும் பழைய நிலைக்கு உயிர்ப்பித்தெழுகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். விழித்திருக்கும் நிலையிலும், உரக்க நிலையிலும் நாம் அனுபவங்கள் அனைத்தும் நம்மால் மட்டுமே உணரப்படுபவை. அவை அனைத்தும் நம் அனுபவங்களின் அடிப்படையில் உருவாகுபவை. அவை அனைத்தும் நம் அனுபவங்களில் புலப்படும் தோற்றங்கள். தோன்றி மறையும் தன்மை கொண்டவை. நிலையானவை அல்ல. இதில் நாம் மட்டுமே உண்மை, மற்றவை நம் அனுபவங்களுக்குள் வந்து போகும் தோற்றங்கள். இங்கே ‘நாம்’ என்று குறிப்படுவது ஸ்தூல, சூட்சும காரண சரீரங்களை அல்ல.

இந்த மூன்று சரீர அனுபவங்களை உணர்த்தும், ஸ்வயமாக, கோடி சூர்யப் பிரகாசமாக சதா ஒளிர்ந்துக்கொண்டிருக்கும் ஆத்மஜோதி. இந்த ஜோதிக்குள் பிரதிபலிக்கும் அனுபவக் குவியலே இந்த மூன்று சரீரங்களும். கடஉபநிஷதம் இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த உலகிற்கு ஒளிதரும் சூர்யனை அடையாளம் காட்டுவதே நம் ஆத்மஜோதிசூர்யனே என்று போதனை செய்கிறது. இதுவே தெய்வீகம். நம் உண்மையான இயல்பு.

தெய்வீகத்தால் உருவாக்கப்பட்ட தெய்வீகப் பிறவிகள் நாம். ஆனால் மனித உருவில் இருந்துகொண்டு தெய்வீகத்தை தேடி அலையும் சாதாரணப் பிறவிகளாக வாழ்கிறோம்.

இந்த மூன்று நிலைகளிலும் விழித்திருக்கும் நிலையிலேயே கண் முன் தெரியும் உலகத்தோடு நல்ல முறையில் உறவாட நம்மால் முடிகிறது. வேதங்கள் இந்த நல்லமுறையில் உருவாடும் விதத்தை சனாதன தர்ம வழி என்று வர்ணிக்கிறது. இது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசுகிறது. ஒன்று‘பிரவர்தி’ நம் வெளி உலக வாழ்க்கையை எப்படி நல்ல முறையில் வாழ்வது? இரண்டாவது ‘நிவர்த்தி’ நம்மை, நமக்குள் இருக்கும் உள்உலகத்தை எப்படி உணர்ந்து விடுதலை பெறுவது என்பது.

வெளியுலக வாழ்க்கையை சமாளிக்க நம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். நல்ல விஷயங்களைக் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். அதைப் பற்றி தீவிரமாக யோசிக்கவேண்டும். புரிந்து கொண்டபின் அவைகளுக்குள் மறைந்திருக்கும் உண்மைகளை உணரவேண்டும்.  இது வேதங்கள் சொல்லித்தரும் எளிய வழி. தெளிவு ஏற்பட்டால் அது நல்ல சிந்தனைகளை உருவாக்கும். நல்ல சிந்தனைகளை செயல்படுத்தும் தைரியமும் நம்பிக்கையும் கிடைக்கும்.

இது மேலும் நல்லக் காரியங்களைச் செய்யத் தூண்டும். தான, தர்மங்களில் ஈடுபடுவது, அனைவரிடமும் ஹிதமாக நடந்துகொளவது போன்றவை அனைத்தும் நமக்கு புண்யங்களைச் சேர்ப்பவை. அவை அனைத்தும் ஸ்தூல சரீரம் இறக்கும்போது, சூட்சும, காரண சரீரங்களில் பதிவாகி, அடுத்த உடலுக்கு செல்கின்றன. இது நாம் செய்யும் நேரடி தானம். ஒரு வேளை மீண்டும் நம்முடனேயே இந்த இரண்டு சரீரங்களும் சேரும் பட்சத்தில் புண்யங்களோடு புதிய வாழ்வு கிடைக்கிறது. இல்லாவிட்டாலும் நம்மால் நிச்சயமாக நல்ல சிந்தனையுள்ள இன்னொரு தலைமுறையை உருவாக்கமுடியும் அல்லவா? குறைந்த பட்சம், மூன்று சரீரங்களும், மூன்று அனுபவ நிலைகளும் பற்றிய ஒரு தெளிவு இருந்தால், ஸ்தூல சரீர சுகத்தைத் தேடும் உந்துதல்கள் குறையும் அல்லவா? தர்ம சிந்தனைகளோடு, தார்மீக வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவம் கிடைக்குமல்லவா? மீதமுள்ள வாழ்வு வளம்பெற வாய்ப்பு உருவாகுமல்லவா?

இந்தப் பக்குவம் சாதாரணமாக கிடைப்பது இல்லை. இதற்கு கடுமையான பயிற்சி, முனைப்பு ஆகியவை தேவை. இவை அனைத்தும் முற்றும் உணர்ந்த பிரம்மகுரு ஒருவரின் ஆசியுடன், வழிகாட்டுதலுடன் மட்டுமே சாத்தியம்.

‘அடேயப்பா, இவ்வளவு அதிசயங்கள் நமக்குள் சதா நடந்துகொண்டிருக்கிறதா? ஒரே மலைப்பாக இருக்கிறது’ என்று அங்கலாய்த்தார் நண்பர். ‘என் வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்த பின்னர், இவ்வளவு நல்ல விஷயங்களை இப்போதாவது தெரிந்துகொள்ள முடிந்தது. மீதி நாளிலாவது இந்த உலகத்தோடு நல்ல முறையில் உறவாட முயல்கிறேன். முதலில் என் குடும்பத்தாற்கும் நண்பர்களுக்கும் இந்தத் தகவல்களைச் சொல்லி அவர்களையும் கரைசேர்க்கப் பார்க்கிறேன்’ என்று புலம்பிக்கொண்டே அவசரமாக சென்றுவிட்டார். 

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.