மஹாகவி காளிதாசனின் தாகம்!

வெ. நாராயணமூர்த்தி

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சுவையான கதை. பாரதத்தை குப்தர்கள் ஆண்ட காலம். வேதசாஸ்த்ரங்களுக்கும் புராணங்களுக்கும் புத்துயிர் கொடுத்த காலம். விக்ரமாதித்ய மஹாராஜனின் சபையில் நவரத்தினங்களில் ஒருவரான மஹாகவி என்று புகழப்பட்ட காளிதாசன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் ஒன்று இந்தக் கதை.

எளிமையிலும் ஏழ்மையிலும் திளைத்த கவி காளிதாசன் ஒரு நாள் ஒரு சிற்றூர் வழியாக சென்றுக்கொண்டிருந்தான். நீண்ட தூரம் நடந்ததால் பசியும் தாகமும் வாட்டியது. சற்று தூரத்தில் ஒரு பெண்மணி ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருந்தாள்.

கவி அவளை அணுகி, ‘அம்மா மிகுந்த தாகமாக உள்ளது. குடிக்க கொஞ்சம் நீர் தரமுடியுமா?’ என்று பவ்யமாகக் கேட்டான். ‘நீ இந்தப் பகுதிக்கு புதியவனாக இருக்கிறாய். புதியவர்களுக்கு நான் நீர் தரமுடியாது’ என்று வெடுக்கென்று பதில் தந்தாள் அந்தப் பெண். கவிக்கு அதிர்ச்சி. ஆனாலும் விடுவதாக இல்லை. அவளிடம் தன் புலமையால் சாதூர்யமாகப் பேசி தன் தாகத்தை தீர்த்துக்கொள்ள நினைத்தான்.

‘அம்மா நான் பரவாசி (வழிப்போக்கன்). தயவு செய்து நீர் தாருங்கள்’, என்றான். அந்தப் பெண்ணோ, ‘எனக்கு தெரிந்து இரண்டு பரவாசிகள்தான் இருக்கிறார்கள். ஒன்று சூரியன் இன்னொன்று சந்திரன். இந்த பூமியையே சுற்றுபவர்கள் அவர்கள்தான். அது நீ அல்ல’ என்றாள்.

கவிக்கு அந்தப் பெண்ணின் போக்கு வித்தியாசமாகப் பட்டது. ஆனாலும் விடவில்லை. தாகம் வேறு பிடுங்கியது. ‘அம்மா, போகட்டும், நான் உங்கள் கிராமத்துக்கு வந்துள்ள பாதாதிதி (விருந்தாளி) அதை கருத்தில் கொண்டு நீர் தாருங்கள்’ என்றான். ‘எனக்கு தெரிந்து இரண்டு விருந்தாளிகள்தான் இருக்கிறார்கள். ஒன்று இளமை, இன்னொன்று செல்வம். இருவரும் வருவார்கள் போவார்கள். அது நீ அல்ல’, என்றாள் அந்தப் பெண்.

இது என்ன சோதனை! இந்தப் பெண் படுத்துகிறாளே என்று கவி ஆதங்கப்பட்டான். தாகமும், அந்தப் பெண்ணின் மிடுக்கான போக்கும் தன்னை ஹிம்சை படுத்துவதை உணர்ந்தான். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், பொறுமையுடன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு மீண்டும் கேட்டான்.

 ‘அம்மா, நான் ஒரு சஹனசீலன் (பொறுமைசாலி). தயவு செய்து நீர் தாருங்கள்’ என்றான். அவளோ, ‘ எனக்குத் தெரிந்து இரண்டு பேர்தான் பொறுமைசாலிகள். ஒன்று பூமாதேவி, இரண்டாவது விருட்சங்கள் (மரங்கள்). எவ்வளவு தீமை செய்தாலும் மற்றவர்களுக்கு நன்மை மட்டுமே செய்பவர்கள். அது நீ அல்ல’ என்றாள்.

இந்தப் பெண்ணை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றான் காளிதாசன். இப்படிப்பட்ட புலமை வாய்ந்த பெண்ணை தன் வாழ்நாளில் பார்த்ததேயில்லையே என்று ஆச்சரியப்பட்டான். இவளை எப்படி சமாளிப்பது?

கவி தன் போக்கை மாற்றிக்கொண்டு, ‘நான் ஹடவாதி (அடம் பிடிப்பவன்). தேவைப்படுவதை அடையாமல் விடமாட்டேன். அலைக்கழிக்காமல் எனக்கு நீர் தாருங்கள்’ என்றான். பெண்ணோ சற்றும் சளைக்காமல், ‘எனக்குத் தெரிந்து இரண்டு பேர்தான் அடம் பிடிப்பவர்கள். ஒன்று கேசம் (தலைமுடி) இன்னொன்று நகம். தடுத்தாலும் வளர்ந்துகொண்டிருப்பவை. அது நீ அல்ல’ என்றாள். கவிக்கு இப்போது கோபம் வந்தது. என்ன இது! இந்தப் பெண் தன்னை இப்படி சீண்டுகிறாளே. எப்படி தன் தாகத்தை தீர்த்துக் கொள்வது? என்று தவித்தான்.

தன் புலமை இவளிடம் எடுபடப் போவதில்லை என்று தெரிய ஆரம்பித்தது. அதனால் மிரட்டிப் பார்க்க எண்ணினான்.‘அம்மா, நான் ஒரு மூர்க்கன், என்னை வம்புக்கு இழுக்காமல் தயவு செய்து நீர் தாருங்கள்’ என்றான் சிறிது கோபத்துடன். அந்தப் பெண்ணோ கொஞ்சமும் அசராமல், ‘எனக்குத் தெரிந்து இருவர்தான் மூர்க்கர்கள். ஒன்று, தன் பிரஜைகளைப் பற்றியே கவலைப் படாமல் நாட்டை ஆளும் ராஜன். இரண்டாவது, இவ்வளவு மோசமான ராஜனையே புகழ்ந்து பாடும் மந்திரி. நிச்சயமாக அது நீ அல்ல’ என்றாள்.

யார் இவள்? இந்த கிராமத்தில் இப்படி ஒரு புலமை வாய்ந்த பெண்ணா? ஒரு பெரிய கவியான தன்னையே மடக்குகிறாளே! தன் கவித்துவம், ஆணவம், கோபம், தாகம் அனைத்தும் இவள் முன் கரைந்து போனதை உணர்ந்தான். தன் புலமை தனக்கு உதவவில்லையே என்று நொந்துக்கொண்டான்.

இவள் சாதாரணமானவள் இல்லை. தனக்கு புத்தி புகட்டவே நிகழும் தெய்வீக நிகழ்வா இது? யோசிப்பதை நிறுத்தி, அந்தப் பெண்ணின் காலில் விழுந்தான் கவி. தன் தவறை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டான். சாதாரணப் பெண்ணாக இவ்வளவு நேரம் தெரிந்த அவள் இப்போது அன்னை சரஸ்வதியாக ஜொலித்தாள். ’ காளிதாசா, புத்தி (அறிவு) மட்டும் போதாது. அதை பயன்படுத்த தெளிவு வேண்டும். அகந்தை அகன்றால்தான் மெய்ஞானம் கிடைக்கும். இதைப் பெற விவேகம் தேவை. இவைகளை உணர்ந்தால்தான் உன் அறிவு உன்னைக் காக்கும்’ என்று ஆசீர்வதித்து மறைந்தாள்.

உடல்தாகம் தீர்ந்து, அகந்தை அழிந்து விவேகம் உருவானதை காளிதாசன் உணர்ந்தான். மனம் தெளிவானது. இருள் மறைந்து புதிய ஒளி தெரிந்தது. ஞான தாகத்தால் உந்தப்பட்டு, மெய்ஞானப் பாதையில் பயணிக்கத் தொடங்கினான். இந்த தாகத்தின் வெளிப்பாடே அவன் படைத்த காவியங்களான மாளவிகாக்னிமிருதம், ஷாகுந்தலம், விக்ரமோர்வசியம், ரகுவம்ஸம், குமாரசம்பவம், ரிதுசம்ஹாரம், மேகதூதம் போன்றவை. இந்த மஹாகாவியங்கள் இந்தக் காவியை மஹாகவியாக்கியது. இவை இன்றும் நம் பாரத சரித்திரத்தில் அழியாத இடம் பெற்று சம்ஸ்க்ருத மொழியின் புலமையை உலகிற்கே  பறைசாட்டி வருகின்றன.

நண்பர்களே, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செல்லும் இடமெல்லாம் நமக்கு ஆன்மிக மெய்யறிவை உணர்த்தவும், மெய்ஞானப் பாதையில் இட்டுச் செல்லவும் பல ‘பேர்’ பல ரூபங்களில் காத்திருக்கிறார்கள். எளிமையான வழிகளில் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள வாய்ப்புகளை அள்ளித் தருகிறார்கள். இந்த தெய்வ சக்தியை அடையாளம் காணவோ அதை உணராவோ, நல்வழியை ஏற்றுக்கொள்ளவோ காளிதாசன் போல நாம் தயாராகவேண்டும்!

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.