வெட்டுக்கிளி படையெடுப்பு ஏன் தெரியுமா?


சென்னை: வடமாநில விவசாய நிலங்களைப் பாழ்படுத்தி வரும் வெட்டுக்கிளி தமிழகத்தை நோக்கி வந்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் இந்த அச்சம் தேவையில்லை. வடமாநிலங்களை ஆக்கிரமித்துள்ள வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமிக்குள் நுழைவதற்கு வாய்ப்பில்லை. அதனால் தமிழகத்துக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை என்று வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர்.


ராஜஸ்தானில் கடந்த ஓராண்டு முன்பு தொடங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்தது. இதில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளன.
வழக்கமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களுடன் நின்றுவிடுவது வழக்கம் என்கின்றனர் வேளாண் துறையினர்.


அப்படி ஒருவேளை தமிழகத்தினுள் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் சூழல் ஏற்பட்டால் மாலத்தியான் மருந்தை மிகப்பெரிய தெளிப்பான்கள் மூலம் தெளிக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையும் செய்துள்ளது வேளாண் துறை.
ஆனால் கடந்த 3 தலைமுறைகளுக்கு முன்பு வெட்டுக்கிளி படையெடுப்பில் தமிழகமும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான பதிவுகள் ஒருசில கதைகளிலும் இடம்பெற்றுள்ளன. இச்சூழலில் வெட்டுக்கிளிகள் தமிழகத்தை நோக்கி படையெடுக்குமா என்பதற்கான விடை இன்னும் ஒருசில வாரங்களில் தெரிந்துவிடும்.

விவிலியத்தில் வெட்டுக்கிளி


சாதாரணமாக வெட்டுக்கிளி சொற்ப எண்ணிக்கையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் வழக்கமாக காணப்படும் பூச்சியினம்தான். இவற்றின் ஆயுள்காலம் 6 முதல் 8 வாரங்களே. அதற்குள் அவை 3 முறை முட்டையிடுவதன் மூலம் குறைந்தபட்சம் 1,000 பூச்சிகளுக்கு மேல் உருவாக்கும் இயல்பு கொண்டவை.
வெட்டுக்கிளிகள் சாந்தமான பூச்சி வகையைச் சேர்ந்தது. ஆனால் அவற்றின் அகோரப் பசிக்கு, விளைவிக்கப்படும் உணவு தானியங்கள் முற்றிலும் அழிக்கப்படுவதால்தான் அவை மனிதனுக்கு ஆபத்தானவையாக மாறியுள்ளன.

வெட்டுக்கிளி உணவு தானியங்களை அழித்து மக்களுக்கு மரண தண்டனையை வழங்கி விடும் என்று கிறிஸ்தவ புனித நூலான விவிலியத்தில்கூட கூறப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அகோர பசியைக் கொண்டவை இவை.
1880-களில் ரஷ்யாவின் தெற்குப் பிரதேச மக்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு அஞ்சி பல நாள்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்களாம்.
1955-இல் மொரோக்கோ நாட்டுக்கு பறந்து வந்த வெட்டுக்கிளி கூட்டத்தின் அகலம் சுமார் 20 கி.மீட்டர் இருந்ததாம். அப்போது இவை சுமார் 1000 சதுர கி.மீட்டர் பரப்பில் இருந்த பயிர்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.


அறுவடைக்கு தயாராக இருக்கும் வேளாண் நிலங்கள்தான் இவற்றின் இலக்கு. அவற்றுக்கு மிகவும் பிடித்தமான உணவாக சோளமும், கோதுமையும் இருக்கின்றன. இவை இல்லாவிட்டால் எந்த தானியப் பயிரும் விருப்பமானவைதான்.


வறட்சியான பகுதிகளில்தான் இவை அதிகம் உருவெடுக்கின்றன. ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் உருவாகும் பூச்சிகள் ஒரு சதுர கி.மீட்டர் பரப்பளவில் சுமார் 4 கோடி எண்ணிக்கையில் இடம்பெயர்வதுதான் அவற்றின் படையெடுப்பின் தன்மை.
ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 4 கோடி பூச்சிகளைக் கொண்ட கூட்டம் படையெடுப்பின்போது, ஒரு நாள் உணவுத் தேவை சுமார் 80 ஆயிரம் கிலோ பயிர்கள். இது 35 ஆயிரம் பேருக்கு ஒரு நாளைக்கு தேவையான உணவாகும்.

இவை ஒரு நாளைக்கு 150 கி.மீ்ட்டர் தூரம் வரை இடம்பெயரக்கூடியவை. ஒரு இடத்திலேயே சுற்றி வராமல், தொடர்ந்து நீண்ட தூரம் பயணித்துக்கொண்டே இருப்பதும் இவற்றின் இயல்பு.
இவை ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பாவிலும், சஹாரா எல்லைகள், இந்திய-மலாய் தீவுகள், நியூசிலாந்து, கஜகஸ்தான், சைபீரியா, மடகாஸ்கர் பகுதிகளிலும் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏற்கெனவே கென்யா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளையும் இவை கடுமையாக பாதித்துள்ளது.


விவசாய நிலங்களை பாதிக்கும் இத்தகைய வெட்டுக்கிளிகள் விரைவில் இந்திய-பாகிஸ்தான் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என ஏற்கெனவே ஐ.நா.வின் உணவு மற்றும் பாதுகாப்பு அமைப்பும் எச்சரித்திருந்தது.
இந்தியாவில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் LWO மூலம் வெட்டுக்கிளி படையெடுப்புகள் தொடர்பான அறிவிப்புகள் பெறப்படுகின்றன.


தற்போதைய சூழலில் குஜராத்தின் சில பகுதிகளில் ராஜஸ்தானில் பெரும் பகுதிகளிலும் இவை படையெடுப்பு நடத்தி பயிர்களை அழித்து வருகின்றன. இவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளும் இம்மாநிலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் இவற்றின் வேகமான இடப்பெயர்வு காரணமாக முற்றிலும் அழிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தற்போது அவை மகாராஷ்டிரம், பஞ்சாப் வரை பரவி வந்துள்ளன.

மனிதன் மட்டுமே எதிரி

எதிரிகள் இல்லாதவன் சர்வாதிகாரியாவதுபோல் இன்றைக்கு மனிதன் மட்டுமே அதற்கு எதிரியாக இருப்பதால்தான் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு போராட வேண்டியுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகளுக்கு முக்கியமான எதிரிகள் பறவைகள், எலிகள், ஓணான்கள், பச்சோந்திகள், பாம்புகள், கீரிகள் போன்றவைதான். இவை மனிதனால் ஒருசில பத்தாண்டுகளில் மெல்ல அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது எஞ்சியுள்ளவையும் காடுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால் அரிய உயிரினங்களாக மாறி வருகின்றன.


இந்த பூமியை சமச்சீராக வைத்திட, எந்த உயிரினமும் புவி முழுவதும் பரந்து விரிந்து பரவுவதைத் தடுக்க சுற்றுச்சூழல் சமன்பாட்டு கொள்கையுடையதாக இயற்கை உள்ளது.
ஆனால் மனிதனின் வேகமான அறிவாற்றல் வளர்ச்சி, இயற்கையின் சமன்பாட்டு விதிகளை மதிக்கத் தவறிவிட்டது. இதனால் புவி முழுவதையும் தனக்கே மனிதன் சொந்தம் கொண்டாடுவதன் விளைவுதான் இன்றைக்கு கொரோனாவை அடுத்து வெட்டுக்கிளிகளும் மனிதனை அச்சப்பட வைத்துள்ளன.


இன்றைக்கு 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொரோனா நோய்த் தொற்றும், வெட்டுக் கிளிகளின் படையெடுப்பும் இந்த பூமியை அச்சத்தோடு பார்க்க வைத்துவிட்டதை அவர்களின் கேள்விக் கணைகள் நமக்கு உணர்த்தும்போது நம்மையும் கொஞ்சம் மிரள வைக்கிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.