மேலும் 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்:பிரதமர் உரை
புதுதில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.மேலும் 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25-இல் முதலில் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வரும் சூழலில், நீட்டிக்கப்படும் காலங்களில் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. இக்காலக்கட்டத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். பொது முடக்கத்தை நாட்டில் பல இடங்களில் சரிவர பின்பற்றவில்லை. இத்தகைய சிறு தவறுகள் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும். சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அரிசி, கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும். இலவச பொருள்களுக்காக அரசுக்கு கூடுதலாக ரூ. 90 ஆயிரம் கோடி செலவாகும்.
கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். பிரதமர் தொலைக்காட்சி உரை சுமார் 16 நிமிடம் நீடித்தது.
You must log in to post a comment.