நான்கு லங்கணங்கள்

வெ நாராயணமூர்த்தி

உடலும் உள்ளமும் ஆரோக்யமாக இருப்பதற்கு நான்கு வகையான லங்கணங்களை கடைபிடிப்பதன் வழியாக ஆன்மிகப் பயணத்தை அமைதியாகவும் ஆழ்ந்த முனைப்புடனும் மேற்கொள்ளமுடியும் என்பது நம் முன்னோர்கள் காட்டிய வழி. இந்த வகையில் அவர்கள் அருமையான ஒரு பழமொழியை நமக்குத் தந்துள்ளார்கள்.

‘லங்கணம் பரம ஔஷதம்’ என்பதே அது. இது நாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். ‘சாரக ஸம்ஹித’ சூத்ரஸ்தானங்களில் காணப்படும் ஒரு முக்கிய அறிவுரை இது.

‘லங்கணம்’ என்பது தவிர்ப்பது. சில விஷயங்களை நாமாகத் தவிர்ப்பதே  அனைத்து வகையான உடல், உள்ளம் மற்றும் எண்ணங்கள் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் அருமருந்து என்பது நம் முன்னோர்களின் தீர்க்கமான அறிவுரை.  இங்கே அவர்கள் சொல்லிச் சென்ற நான்கு வகையான லங்கணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.  

முதல் லங்கணம் ‘அன்ன’ லங்கணம். அன்ன லங்கணம் என்பது உபவாசம். உணவைத் தவிர்ப்பது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ‘அன்னம்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. சாதாரணமாக, அன்னம் என்பது நாம் அன்றாடம் உண்ணும் சாதம், குழம்பு போன்றவை என்பது நமக்கு பழக்கப்பட்ட ஒரு வார்த்தை. ஆனால் இது மாத்திரம் அல்ல . எதை எதை உட்கொண்டால் இந்த உடல் பிராண சக்தி பெறுகிறதோ அவை அனைத்தும் அன்னம்தான்.  நாம் உண்ணும் அனைத்தையுமே படைத்தவன் இந்த உலகைப் படைத்தவன். படைத்தவன் தந்ததை நாம் உண்கிறோம். உணவு நம்மை உண்கிறது. உண்பது மட்டுமே நாம். அவை எப்படி உடலுக்குள் செரிமானம் ஆகி நமக்கு சக்தியாகிறது என்பது இன்னும் புரியாத புதிர். இது படைத்தவனின் தெய்வீக விளையாட்டு. அதனால்தான் அன்னத்தை ‘பிரம்மம்’ என்கிறோம். 

அன்னம் என்றால் ‘ஞானம்’ என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. உபநிஷத்துக்கள் இதையே ‘அன்னம், பிராணம், ஞானம், பிரம்மம்’ என்று குறிப்பிடுகின்றன. பிராணத்தையும், பிரம்மஞானத்தையும் தரக்கூடிய அற்புதமானது அன்னம். படைப்பின் பெருமைகளைப் பற்றியும், படைத்தவனின் அனுக்ரஹத்தையும், அன்னத்தின் முக்கியத்தையும் இந்த உலகிற்கு புரிய வைக்கும் ஒரு அற்புதமான காரியம்தான் அன்னதான வைபவம்.

நம் முன்னோர்கள் உடலை ஒரு சாப்பிடும் எந்திரமாகக் காணவில்லை. தேவையான நேரத்தில், தேவைப்படும் அளவான உணவே (ஹித மித ஆஹாரம்) உடலுக்கு சக்தி தருவதோடு மட்டுமல்லாது இது உடலை சீராக செயல்பட உதவி செய்யும் என்பது அவர்களது கருத்து. பாரம்பர்ய மருத்துவத்தில், ஆரோக்ய இலக்கணமாக வெகுவாக பரிந்துரைக்கப்படும் வழிமுறையும் இதுவாகும்.

நாள் முழுதும் இடைவிடாது உணவருந்தும் நபர்களைக் காண்கிறோம். ஆதீத உணவே பல வியாதிகளை உருவாக்குவதையும் காண்கிறோம். உடலுக்கு உணவு தேவைப்படாத நேரத்தில் இந்தக் குறிப்பறிந்து உணவைத் தவிர்ப்பதே லங்கணம். உடல் ‘கேட்கும்போது’ மட்டுமே உணவருந்த வேண்டும். நாக்கு சொல்வதை கேட்பதைத் தவிர்த்து வயிறு சொல்வதைக் கேட்கவேண்டும். இடையே நம் முன்னோர்கள் ‘பசித்துப் புசி’ என்று வலியுறுத்தினார்கள் . பசிக்கும்போது சிறிது கவனித்துப் பார்த்தால் நாசி வழியாக அதிக பிராண சக்தி உள்இறங்கும். இதை நுணுக்கமாக கவனிக்கவேண்டும். இந்த நேரத்தில் மட்டுமே உடல் உணவை ஜீரணிக்க தயாராகிறது என்று உடல் நமக்கு அளிக்கும் சமிஞ்சை இது. அப்போது மாத்திரமே உணவை உட்கொள்ளவேண்டும். மற்ற நேரங்களில் திணிக்கபடும் உணவு சரியாக ஜீரணிக்கபடாமல் அரைகுறை சக்திகளோடும், தீமை தரும் நஞ்சாகவும் மாறி தவிர்க்கக்கூடிய வியாதிகளை உருவாக்குகிறது. நோய்களால் தாக்கபட்ட விலங்குகள் செய்யும் முதல் வேலை உணவைத் தவிர்ப்பதுதான்.

ஆதலால், பசியாறும் வழிமுறைகளை நான்கு தெரிந்துகொள்வது அவசியம். நம் உடல் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளுக்கும் (ஜீரணம், தூக்கம், விழிப்பு போன்றவை) அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு பிறகே நம்மை இந்த செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இதைக் கூர்ந்து கவனித்து நட்புடன் பின்பற்றும்போது உடல் நமக்கு அதன் முழு சக்தி பரிமாணத்தையும், ஆற்றலையும் நாம் பயன்படுத்திக்கொள்ள  வழிவகை செய்கிறது. இந்த சூட்சுமத்தை புரிந்துகொண்டு உடல் வழி செல்லும்போது எந்தவிதமான நோய்களும் நம்மைத் தாக்குவதில்லை.

பலவிதமாக வழிமுறைகளில் உணவைத் தவிர்க்கலாம். ஒரு மாதத்தில் சில நாட்கள் (உதாரணமாக ஏகாதசி விரதம், குருவார விரதம், சஷ்டி விரதம் போன்றவை), அல்லது தினமும் ஒரு வேளை உண்ணாமல் தவிர்ப்பது அல்லது வாரத்தில் சில நாட்கள் இப்படி. வெறும் தண்ணீர் அல்லது பழ ரசம் மட்டுமே குடித்து மற்ற உணவைத் தவிர்ப்பது, காய்கறிகளை மட்டுமே உண்ணுவது, பழங்களை மட்டுமே உண்ணுவது போன்ற வழிமுறைகளையும்  (இவைகளில் எந்த விதத்தையும்) தொடர்ந்து கடைபிடிக்கலாம். உடலுக்குத் தேவையான, சரியாக ஜீரணம் ஆகக்கூடிய, தொல்லை தராத, சமநிலை பராமரிப்புக்கு உகந்த, நோய் எதிர்ப்புசக்தி தரக்கூடிய, சரியான உணவு வகைகளை, தொல்லை தராமல், அளவாக உண்ணுவதும் லங்கணம்தான். ஆரோக்யமான உடல் மட்டுமே ஆரோக்யமான உள்ளத்தை பராமரிக்கும். இதுவே ஆரோக்யமான சிந்தனையைத் தூண்டும். நல்ல சிந்தனைகளுடன் ஆன்மீகத் தேடலுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள பெருவாரியாக உதவும் முதல் லங்கணம் இது.

இரண்டாவது லங்கணம் ஸ்வாச லங்கணம். பிராண மூச்சுக் கட்டுப்பாடு. உடல் ஒரு இஞ்ஜின் போன்றது. (உடலைப் பார்த்துத்தான் இஞ்சினே கண்டுபிடிக்கபட்டது!) நாம் உள்ளிழுக்கும் பிராண மூச்சு இந்த இஞ்ஜினை இயக்கும் எரிபொருள். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கான சக்தியை அளிப்பது பிராண மூச்சே. பிராணசக்தி அதிகமானால் அது தேவைக்கு அதிகமாக எரிந்து சீக்கிரமே காலியாகிவிடுகிறது. இதை அறிந்த நம் முன்னோர்கள், உள் மூச்சைக் மெதுவாக குறைத்து, நீண்ட நேரம் வெளிமூச்சைக் கட்டுப்படுத்தி மெதுவாக வெளியேற்றி, பிராண சக்தியை சரியாக எரிக்கச் செய்து உடலை பழுதில்லாமல் பாதுகாத்தனர். இந்த ஸ்வாஸ லங்கணம் வயதாவதை குறைத்து, நல்ல எண்ணங்களை உருவாக்கும் கலை என்பதையும் உணர்ந்திருந்தனர். இதனால் அவர்களால் நீண்ட ஆயுளோடு, நல்ல எண்ணங்களைப் பலரோடுப் பகிர்ந்து மனநிறைவோடு இன்பமுடன் வாழ முடிந்தது.

மூன்றாவது லங்கணம் தீய வார்த்தைகளைக் கட்டுபடுத்தும் லங்கணம். வாக் லங்கணம். சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி நல்ல எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் வழிமுறை. ஒரு சிலரே சரியான வார்த்தைகளை அளந்து பேசும் திறமை படைத்தவர்களாகத் திகழ்வதை நாம் பார்க்கிறோம். வார்த்தைகளின் வெளிப்பாடு நம் எண்ணங்களின் வெளிப்பாடு. தீய எண்ணங்களைக் களைந்து நல்ல எண்ணங்களை வெளிக்கொணரும்போது வார்த்தைகள் தெளிவுடனும் தீர்க்கமாவும் வெளிப்படும். சந்தோஷத்தைத் தரக்கூடிய அழகான வார்த்தைகள் கேட்பவர்களுக்கும் நிம்மதியையும் சுகத்தையும், நட்பையும் அளிக்கும். இதற்கு பயிற்சி தேவை. ஆனால் கடினமானது அல்ல. முனைப்புடன் இந்த வாக் லங்கணத்தை மேற்கொள்ளும்போது நமக்கு நேர்மறை எண்ணங்களும் மனப் பக்குவமும் கிடைக்கிறது.

அன்னம் என்கிற சொல்லுக்கு ‘நல்ல வார்த்தை’ என்று இன்னொரு பொருளையும் தருகிறது பாகவதப் புராணம். ‘அன்னந்து ஷ்ரோந்துதா வாணி’. மற்றவர் மனம் புண்பாடாமல் அழகான, மென்மையான வார்த்தைகளால் பேசுவதே நாம் செய்யக்கூடிய மிக எளிதான அன்னதானம் என்பது இந்த பாடலின் பொருள். சாத்வீகமான வார்தைகள், நல்ல சிந்தனையைத் தூண்டக்கூடிய சுந்தரமான சொல்விதைகளை தானம் செய்யும்போது அதைப் பெறுபவர்கள் பலன் அடைவது மட்டுமல்லாது, அவைகளை மற்றவர்களுக்கும் தானம் செய்வார்கள். விதைகள் விருக்க்ஷமாகி சாத்வீக சோலைகள் உருவாகும். என்னதான் பெரிய அளவில் தானங்களை (பொருளோ, அன்னமோ) செய்தாலும், நம் சொல் சரியில்லை என்றால் அவைகளைப் பெறுபவர்கள் மனம் சுருங்கி, தானத்தை மறுத்து விலகி நிற்பர். நல்ல வார்தைகளோடு சிறிய அளவில் எளிமையாக செய்தாலும் கூட தானம் பெறுபவர்கள் மனம் மகிழ்ந்து வாழ்த்துவார்கள், என்கிறது ரிக் வேதம்.

நான்காவது ‘அசைவு’ லங்கணம். ‘அசல’ லங்கணம். நாம் சதா அசைவுகளிலேயே இருக்கிறோம். காலை எழுந்தது முதல் உறங்கும் வரை, நிலை கொள்ளாமல் உடலையும் உள்ளத்தையும் தொடர்ந்து விரட்டிக்கொண்டு இருக்கிறோம். இதனால் இரண்டும் சதா உளைச்சலிலும், குழப்பதிலேயேயும் உழன்று கிடக்கின்றன. இவைகளை அமைதிப் படுத்துவது மிக முக்யம். இல்லாவிட்டால் இவை இரண்டும் சிக்கல்களில் தடுமாறி நம்மை பிரச்னைகளில் சிக்க வைக்கும். அதனால் முடிந்தவரை அசைவு லங்கணம் மேற்கொள்ளவேண்டும். நமக்குப் பிடித்த இடத்தில், அமைதியாக அசையாமல் உட்கார்ந்துகொண்டு, நமக்கு பிடித்த மந்த்ரங்களையோ, இஷ்ட கடவுளர்களையோ, குருவையோ நினைத்து அதிலேயே லயித்துநிற்பது இது. ஒரு நிமிடம் உட்கார்ந்து, நம்மை அமைதிப் படுத்தும்போது மனதுக்குள்ளும் உடலிலும் கொந்தளிப்பைக் குறைக்கும். இந்தப் பயிற்சி தொடரும்போது நீண்ட நேரம் நம்மை அமைதிப் படுத்திக் கொள்ள முடியும். இதனால் பல உடல் ரீதியான மன ரீதியான ரோகங்கங்களை சரி செய்துகொள்ள முடியும்.

லங்கணம் ஒரு மிகப் பெரிய சக்தி, செலவில்லாதது. வளம் தரும் எளிய கலை, இது நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற ஒரு வரப்ரசாதம். இந்த நான்கு லங்கணங்களைத் தொடர்ந்து பின்பற்றி பயிற்சி செய்யும்போது நம் உடலிலும்  மனதிலும் கொந்தளிப்பு அடங்கும், அமைதியும், ஆனந்தமும், ஆரோக்யமும் நம் வசமாகும். இது நம் ஆன்மீகத் தேடலுக்கான முதல் படி.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.