கீழடி அகழாய்வில் எடைக் கற்கள் கண்டெடுப்பு

சிவகங்கை: கீழடி அகழாய்வில் பழைமையான எடைக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது கீழடியில் நடைபெறும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது. இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது. அந்த அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லால் ஆன நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 எடை கொண்டுள்ளன. கீழடி அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இக்குழிகளில் கிடைக்கப்பெற்றுள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை தொழில் கூடமாக செயல்பட்டுள்ளதற்கு ஆதாரமாக கிடைத்துள்ளன.

தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.