கர்ம வீரர் கு. காமராஜ் பிறந்த நாள்

மறைந்த முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் கல்விக் கண் திறந்தவருமான கு. காமராஜின் பெருமைகளை ஒரு பக்கத்தில் எழுதி அடக்கி விட முடியாது.

தமிழகத்தின் இன்றைய கல்வி வளர்ச்சி, இலவச சத்துணவு, தொழில்வளம், வேளாண்மைக்கு இன்றைக்கு உதவும் அணைத் திட்டங்கள் பலவற்றுக்கும் வித்திட்டவர் அவர். தன்னலம் கருதாது மக்கள் நலம் பேணிய தனிப்பெருந்தலைவர் என்ற பெருமைக்குரியவர். மாற்றுக் கட்சியினராலும் போற்றப்பட்டவர்.

காமராஜர் 1903 ஜூலை 15-இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை தொடர முடியாத அவர் தனது 16 வயதில் தேசத் தலைவர்களின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டத்திலும், அரசியலிலும் ஈடுபடத் தொடங்கினார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்று 8 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவித்தவர்.

நாடாளுமன்றவாதியான சத்தியமூர்த்தியை தனது குருவாக ஏற்றவர். 1953-இல் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பெருவாரியானோரின் ஆதரவின் காரணமாக அவர் தமிழக முதல்வராக தமிழ்ப் புத்தாண்டு அன்று பொறுப்பேற்றார்.

அவர் முதல்வரான பிறகு தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு, தமிழகத்தின் வேகமான வளர்ச்சிக்கு அவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் இன்றைக்கும் கட்சி பாகுபாடின்றி அனைவராலும் பாராட்டு பெறுகின்றன.

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைக் கைவிட்டார். தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960- களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980- களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி திட்டமாகும்.

இன்றைக்கு மதிய உணவுத் திட்டம் உலக அளவில் பாராட்டு பெற்ற திட்டமாக விளங்குகிறது. சத்துணவுத் திட்டம் காரணமாக பள்ளிகளில் படிப்போர் சதவீதம் அதிகரித்தது. இன்றைக்கு உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு அன்று காமராஜர் ஆரம்ப கல்விக்கு வித்திட்ட விதைதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.  அவரது ஆட்சியில் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, பரம்பிக்குளம் ஆழியாறு பாசத் திட்டம், சாத்தூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு 10 முக்கிய நீரப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராஜரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் கருதப்படுகிறது. அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும் வருமாறு:

பாரத மிகுமின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (இதன் தற்போதைய பெயர் சிபிசிஎல்) ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ஐசிஎப்) நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை.

குந்தா மின் திட்டமும், நெய்வேலி, ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை. காமராஜர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும் ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார். அவர் முதல்வராக இருந்தது 9 ஆண்டுகள் மட்டுமே, ஆனால் அவர் தீட்டிய திட்டங்களுக்கும், நடைமுறைப்படுத்திய திட்டங்களுக்கும் பல தலைமுறைகளை தலைநிமிர வைத்துள்ளன.

காமராஜர் எளிமைக்கும், நேர்மைக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர். அவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசர்களை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுபவர். அத்துடன் அவர் கருப்பு காந்தி என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். காந்தி பிறந்த அதே நாளில் 1975-இல் காமராஜர் மறைந்தார்.

இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதை 1976-இல் வழங்கியது. மதுரை பல்கலைக் கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் ஆகியன காமராஜர் பெயரை தாங்கி நிற்கின்றன. அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்து பெருமைக் கொண்டுள்ளது.

பிறந்த நாள்

1876 – தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கிய மறைமலை அடிகள் பிறந்த நாள்
1903 – தமிழகத்தில் கல்விக் கண் திறந்த மறைந்த முன்னாள் முதல்வர கு. காமராஜ் பிறந்தநாள்.

1926 – திரைப்பட இயக்குநர் கே. ஷங்கர் பிறந்த நாள்

பிற நிகழ்வுகள்

1240 – அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த “ஜோன் பால்” என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
1741 – அலெக்சி சிரிக்கொவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.
1815 – நெப்போலியன் போனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் காப்டனிடம் சரணடைந்தார்.
1840 – ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
1870 – புரூசியாவும் இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தங்களுக்கிடையே போரை தொடங்கின.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1888 – ஜப்பானின் பண்டாய் மலை வெடித்ததில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
1916 – வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை தொடங்கினர்.
1927 – வியன்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1954 – இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.
1955 – அணு ஆயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1974 – சைப்பிரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை அதிபராக்கினர்.
1983 – பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
2003 – மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.