ப. ஜீவானந்தம் பிறந்த நாள்
ப. ஜீவானந்தம் 40 ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு தியாகங்கள் புரிந்த பொதுவுடமைத் தலைவர். 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் பிறந்தவர். அவர் தனது பொது வாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, ஒரு பொதுவுடமை இயக்கத் தலைவராக வலம் வந்தவர். அவர் தன்னை நாத்திகராகவும் அறிவித்துக் கொண்டவர்.
கலை, இலக்கிய உணர்வுள்ள ஜீவா இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தவர். அவரது கவிதைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் வந்தன. பாரதியைப் போன்று பாமரர்களை எழுச்சிப் பெறச் செய்த பல பாடல்களை பாடியவர். பொதுவுடமை கட்சிக் கூட்டங்களில் முதன்முறையாக தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றவர். 1952-இல் வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
ஜீவாவின் இறுதிகால செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது கலை இலக்கியப் பெருமன்றம் உருவாக்கம் ஆகும் (1961). கொள்கையைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959-இல் தொடங்கினார். அதில், பொதுவுடமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் “தமிழ் மணம் பரப்ப” என்று பாராட்டி கவிதைகள் எழுதினார். 1933-இல் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல். ஜீவா 1963 ஜனவரி 18-இல் மறைந்தார்.
பிற நிகழ்வுகள்
1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1831 – கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.
1842 – டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லாரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
1911 – லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் போர் முடிவடைந்தது.
1959 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
1968 – சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.
1969 – ஆஸ்திரேலியரான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவர் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தார்.
1983 – பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
1986 – கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.
You must log in to post a comment.