ஜப்பானில் இந்தியர்கள் நுழையத் தடை

டோக்கியோ: கொரோனா பாதிப்பு ஜப்பானில் குறைவாகவே உள்ளது. இச்சூழலில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜப்பானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இச்சூழலில் ஜப்பானில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்த அளவில்தான் காணப்படுகிறது. இதுவரை அந்நாட்டில் 17 ஆயிரத்துக்கும் குறைவானோர் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அவர்களில் சுமார் 13 ஆயிரம் பேர் நோய்த் தொற்றில் இருந்தும் விடுபட்டுள்ளனர். இதையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளார்.
இருப்பினும், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் பயன்படுத்துவதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளின்
மக்கள் ஜப்பானில் நுழைவதற்கும் தடை விதித்துள்ளார்.
ஏற்கெனவே ஜப்பானில் 188 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், எல் சால்வடார், கானா, கினியா, கிர்கிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.